சமீபத்தில் தான் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டு எதிரிகளது இலக்குகளைத் தாக்கி அளிக்கக் கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியிருந்தது.
ஏற்கனவே கடந்த மாதம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்ட தூர வீச்சம் கொண்ட ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்திருந்தது.
இந்நடவடிக்கைகள் அதன் அண்டை நாடும், பகை நாடுமான தென்கொரியாவில் மாத்திரமன்றி கிழக்காசியப் பிராந்தியத்திலேயே பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதன் முதலாக தென்கொரியா, முழுதும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட முதலாவது விண்வெளி ராக்கெட்டை விரைவில் ஏவுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது தனது தேவைகளுக்கான செய்மதிகளை விண்ணுக்கு ஏவுவதற்கான தென்கொரியாவின் முயற்சிகளுக்கான முக்கிய படிக்கல்லாகக் கருதப் படுகின்றது.
கொரிய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு, வானிலை நிலமைகள் சாதகமாக இருந்தால், 1.5 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டு பூமிக்கு மேலே 600 தொடக்கம் 800 கிலோ மீட்டர் உயரத்தில் அதன் ஆர்பிட்டருக்கு செல்லும் விதத்தில் செலுத்தப் படுகின்றது. தென்கொரியாவின் தெற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிறிய தீவில் இருக்கும் நாரோ விண்வெளி நிலையத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டு ஏவப்படுகின்றது.
90களின் ஆரம்பத்தில் இருந்து விண்ணுக்கு செய்மதிகளை அனுப்பப் பிற நாடுகளைச் சார்ந்திருந்த தென்கொரியா தற்போது உலகின் 10 ஆவது நாடாக சொந்தத் தொழிநுட்பத்தில் விண்ணுக்குச் செய்மதி செலுத்தும் நாடாகப் பெருமையடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது சொந்த முயற்சியில் விண்ணுக்கு அதிதிறன் மிக்க தகவல் தொடர்பு செய்மதிகளையும், இராணுவப் புலனாய்வு செய்மதிகளையும் கூட விண்ணுக்குச் செலுத்தும் திட்டத்திலுள்ள தென்கொரியா 2030 ஆமாண்டளவில் நிலவுக்கும் ஒரு செய்மதியை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.