ஜப்பானின் யூஷு என்ற தீவிலுள்ள அசோ எரிமலை சீற்றம் அடைந்து வெடித்துச் சிதறியதுடன் வானில் 3.5 கிலோ மீட்டடருக்கும் அதிகமான உயரத்துக்குக் கரும்புகையைக் கக்கத் தொடங்கியுள்ளது.
அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு வெளியாகவில்லை என்ற போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித கதியில் முடுக்கி விடப் பட்டுள்ளன.
எரிமலைப் பகுதியை சுற்றி குறைந்த பட்சம் 1 கிலோ மீட்டருக்குள் வசிப்பவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படும் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவிக்கப் பட்டுள்ளனர். அசோ நகரில் மாத்திரம் சுமார் 26 000 பொது மக்கள் வசித்து வருகின்றனர். பிரபல சுற்றுலாப் பகுதியான யூஷு தீவில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வெளியேறி வருகின்றனர். முன்னதாக 2019 இலும் அசோ எரிமலை சீற்றமடைந்திருந்தது.
உலகில் அதிகளவு எரிமலைகள் உள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். இங்கு சுமார் 103 உயிர் எரிமலைகள் இயங்கு நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அசோ எரிமலைப் பகுதியில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் பொது மக்களுக்கு உதவும் நிலையில் செயற்பட்டு வருகின்றனர்.