தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த வாரம் வரலாறு காணாத கடும் மழையும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது.
இதில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 46 ஆக உயர்வடைந்துள்ளது. கனமழையால் சுமார் 8 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியாவில் பஹங் மற்றும் சிலங்கர் ஆகிய நகரங்கள் மிகவும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
பல மாகாணங்களில் பல நூற்றுக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்த 26 000 பேர் மீட்கப் பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மறுபுறம் ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்குப் பாகங்களை மிகத் தீவிரமான பனிப்புயல் தாக்கியுள்ளது. இதனால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 100 உள்ளூர் விமானங்கள் பயணத்தை இடைநிறுத்தியதாக ஜப்பானின் இரு பாரிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வடகிழக்கு ஜப்பானில் பனிப்புயல் இன்னமும் தொடர்வதால் இன்னும் அதிகளவு விமானங்களது பயணங்கள் தடைப் படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமஸ் வார இறுதியில் சர்வதேச அடிப்படையில் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஆயிரக் கணக்கான விமானங்களது பயணங்கள் ரத்து செய்யப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜப்பான் தனது நாட்டில் தற்போது மொத்தம் 231 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்கள் இனம் காணப் பட்டிருப்பதாகவும் இதில் பல வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் இனம் காணப் பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.