உலகம் முழுதும் டெல்டா மாறுபாட்டை விட 3 மடங்கு வேகமாகப் பரவுவதாகக் கருதப் படும் ஒமிக்ரோன் கொரோனா திரிபானது அச்சுறுத்தி வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் சனச்செறிவு அதிகமாக உள்ள மாநிலமான நியூசவுத்வேல்ஸ் இல் முதலாவது ஒமிக்ரோன் இறப்பு பதிவாகியுள்ளது.
மேலும் அங்கு திங்கட்கிழமை மாத்திரம் 6000 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
ஒமிக்ரோனால் இறந்த நபர் மேற்கு சிட்னியைச் சேர்ந்த 80 வயதைக் கடந்தவர் என்றும் ஆனால் அவர் முழுமையாகத் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர் என்றும் தெரிய வருகின்றது. இதேவேளை தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று தொடர்பாக நடத்தப் பட்ட ஆய்வுகளின் படி ஒமிக்ரோன் மிக வேகமாகப் பரவினாலும், முந்தைய கோவிட் திரிபுகளை விட லேசான பாதிப்பைத் தான் ஏற்படுத்துகின்றன என்றும் இதனால் மருத்துவ மனையில் சிகிச்சை தேவைப் படும் வாய்ப்புக்கள் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கும், வயதான, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கும் ஒமிக்ரோன் மாறுபாடு நிச்சயம் ஆபத்தானதே ஆகும். இதேவேளை 2022 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் சிங்கப்பூர் அரசானது தனது நாட்டு மக்கள் வேலை அனுமதி விண்ணப்பங்கள் மற்றும் நிரந்தர வதிவிட அனுமதி போன்ற முக்கிய தேவைகளுக்கு கோவிட் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட அனுமதிப் பத்திரத்தை கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வரத் தீர்மானம் எடுத்துள்ளது.
ஏற்கனவே வேலை அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் அதனைப் புதுப்பிக்கவும் கட்டாயம் தடுப்பு மருந்து எடுத்திருத்தல் சிங்கப்பூரில் இனி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம் 12 வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், மருத்துவ காரணங்களுக்காகத் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள இயலாவதவர்களுக்கும் செல்லாது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.