மிக மிக வேகமாகப் பரவும் தனது இயல்பு காரணமாக உலகை அச்சுறுத்தி வரும் கோவிட் இன் புதிய மாறுபாடான ஒமைக்ரோன் 3 ஆவது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையேயும் பரவுவது கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அமெரிக்க ஆய்வாளர்களை சற்று கலக்கமடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் 22 மாகாணங்களில் ஒமைக்ரோன் வைரஸ் பரவல் கண்டறியப் பட்டுள்ள நிலையில் தொற்று நோயியல் நிலை மேலும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒமைக்ரோன் திரிபு அதிகளவில் இனம் காணப் பட்டாலும் ஆறுதல் தரும் விதமாக இதுவரை இறப்பு எதுவும் பதிவாகவில்லை என சிடிசி அமைப்புத் தெரிவித்துள்ளது. ஆயினும் ஏனைய கோவிட் மாறுபாடுகளைப் போன்ற நோய் அறிகுறிகளை ஒமைக்ரோன் திரிபும் ஏற்படுத்தி வருகின்றது.
முதலாவது ஒமைக்ரோன் தொற்று அமெரிக்காவில் டிசம்பர் 1 ஆம் திகதி அடையாளம் காணப் பட்டிருந்தது. இதேவேளை முன்னதாக கோவிட்-19 பெரும் தொற்றுக்கு எதிராக உலகில் முதலில் ஸ்புட்னிக் என்ற தடுப்பு மருந்தை கண்டு பிடித்திருந்த ரஷ்யாவின் கமலேயா தேசிய தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் ஒமைக்ரோன் திரிபுக்கு எதிராகவும் தடுப்பூசி கண்டு பிடித்திருப்பதாக உறுதிப் படுத்தப் படாத தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்தப் புதிய தடுப்பு மருந்து கோவிட் இன் முந்தைய அனைத்து உருமாற்றங்களுக்கும் எதிராக உருவாக்கப் பட்டிருப்பதாக கமலேயா நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ஜிண்ட்ஸ்பர்க் ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.