7.3 ரிக்டர் அளவுடையை மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கிழக்கு இந்தோனேசியாவை செவ்வாய்க்கிழமை GMT நேரப்படி அதிகாலை 3:20 மணிக்கு தாக்கியதில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு பின்னர் மீளப் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்தாக இருந்தாலும் பாரியளவில் சேதங்களையோ, உயிரிழப்புக்களையோ ஏற்படுத்தவில்லை.
ஆனால் இதன் பின் 4 மற்றும் 5 ரிக்டர் அளவுடைய தொடர் நில அதிர்வுகள் இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும், பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS இன் தரவுகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய அதிர்வாக ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து மேற்கே 33 Km தொலைவில் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதன் போது பாதிப்புக்கள் ஏதும் ஏற்பட்டதாகவும் இதுவரை தகவல் இல்லை.
இதேவேளை நேற்று இந்தோனேசியாவைத் தாக்கிய 7.7 ரிக்டர் நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவின் மொவ்மேர் நகரத்தில் இருந்து 100 Km தொலைவில், புளோரஸ் கடற்பரப்பில் கடலுக்கு அடியில் 18.5 Km ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் போது உடனே 1000 கிலோ மீட்டர் தொலைவு வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்ட போதும் அது சில மணி நேரங்களில் மீளப் பெறப்பட்டது.