ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் ஊடகப் பேட்டியின் போது உக்ரைன் விடயத்தில் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்த மேற்குலகம் தவறினால் தனக்கான தேர்வுகளில் தான் நிச்சயம் கடும் போக்கைக் கடைப் பிடிக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கியமாக உக்ரைனில் நேட்டோ தனது ஸ்திரத் தன்மையை விரிவுபடுத்துவதைக் கைவிட வேண்டும் என்றுள்ளார் புதின்.
டிசம்பர் தொடக்கத்தில் ரஷ்யா சமர்ப்பித்த அரச பாதுகாப்பு ஆவணத்தில், உக்ரைன் மற்றும் முன்னால் சோவியத் யூனியன் நாடுகளுக்கான உறுப்புரிமையை நேட்டோ மறுக்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப் பட்டுள்ள தனது இராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களை மீளப் பெற வேண்டும் என்றும் இதை விரைவாக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும், உக்ரைன் விவகாரத்தில் ஒரு உத்தரவாதத்தை அவை அளிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்திருந்ததுடன், நேட்டோ அமைப்பின் கொள்கை அடிப்படையில், அதன் உறுப்புரிமை தகுதி வாய்ந்த எந்தவொரு நாட்டுக்கும் திறக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தன. ஆனாலும் அரசியல் இராஜதந்திர நல்லுறவு அடிப்படையிலான ஒரு செயற்படு திறன் மிக்க பதிலையே மேற்குலகத்திடம் இருந்து தான் எதிர்பார்ப்பதாக புதின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை அளிப்பதோ அல்லது ஆயுதங்களை அளிப்பதோ நிச்சயம் மாஸ்கோவுக்கு அபாய சமிக்ஞை தான் எனத் தெரிவித்த புதின், இதற்குப் பதிலடியை எங்கு எவ்வாறு அளிப்பது என்பது தொடர்பில் எமக்கு உறுதியான தெரிவு இல்லை என்றும் கூறினார். ஆனால் உக்ரைனுக்கு நோட்டோ ஏவுகணைகளை அளிக்கும் பட்சத்தில் அவை 4 அல்லது 5 மணித்தியாலங்களுக்குள் மாஸ்கோவை அடையும் சாத்தியம் உள்ளது. இந்நிலையில், இதைப் பார்த்துக் கொண்டு நாம் சும்மாயிருக்க முடியாது என்றும் எம்மால் கடக்க முடியாத ஒரு கோட்டுக்கு ஏற்கனவே அவர்கள் எம்மைத் தள்ளி விட்டுள்ளனர் என்றும் புதின் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.