அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்ஸிப்பி நகரத்தில் புத்தாண்டு பிறக்க சில நிமிடங்களே இருந்த போது அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் கொல்லப் பட்டும் 4 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்ஃப்ஃபோர்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை எனப் போலிசார் தெரிவித்துள்ளனர். இதன் போது சுமார் 50 இற்கும் அதிகமான துப்பாக்கி வேட்டுக்கள் சுடப் பட்டதாகவும் கல்ஃப்ஃபோர்ட் போலிஸ் தலைமை அதிகாரி கிறிஸ் ரைல் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூட்டு சம்பத்தைப் பார்த்துக் கொண்ட யாரும் உடனடியாக அவசர போலிஸ் அழைப்பு இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவில்லை என பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கிறிஸ் ரைல் கவலை தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு பிறக்க 2 நிமிடங்களுக்கு முன்பே 911 இலக்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் ஒருவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் பின்னணி என்னவென்றும் இதுவரை உறுதியாகக் கண்டறியப் படவில்லை. ஆயினும் பரவலாகப் பாவிக்கப் படும் துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் மற்றும் அல்கஹோல் பாவனை போன்றவையே இது போன்ற சம்பவங்களை ஊக்குவிப்பதாகப் போலிசார் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் சமீப காலமாக பொது மக்கள் இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டுக் கொண்டாட்ட சமயத்திலும் இது போன்ற வன்முறை இடம்பெற்றுள்ளது பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.