இன்று ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் உள்ள அந்நாட்டு பாராளுமன்றக் கட்டடத்தில் பாரியளவிலான தீ பரவுகை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
GMT நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது தீயை அணைக்க அதிகளவிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பணியில் ஈடுபட்டதாகத் தெரிய வருகின்றது.
இச்சம்வத்தின் போது பாராளுமன்றக் கூரையும், தேசிய அசெம்பிளி கட்டடத்திலும் கூடத் தீயில் சிக்கியதாக கேப்டவுன் அவசர சேவைப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இக்கட்டடத்தில் குறிப்பிட்டளவு சேதம் ஏற்பட்டுள்ள போதும் தற்போது தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கூரை தீப்பிடித்து எரியும் நிகழ்வானது வீடியோ எடுக்கப் பட்டு சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப் பட்டு வருகின்றது.
தீ எதனால் ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் பாராளுமன்றக் கட்டடமானது 1884 களில் கட்டப் பட்ட மிகப் பழமையானது என்ற போதும் பின்பு 1920 களிலும், 1980 களிலும் மீளப் புதுப்பிக்கப் பட்டிருந்தது. 2021 ஏப்பிரலில் கேப்டவுனில் உள்ள மிகப் பழமையான ஆப்பிரிக்க பொக்கிஷங்களைக் கொண்டிருந்த பல்கலைக் கழக நூலகக் கட்டடமும் தீயில் சிக்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.