JWST என அழைக்கப் படும் ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி இந்த நூற்றாண்டின் அதி முக்கிய விஞ்ஞான உபகரணம் அல்லது அகச்சிவப்புக் கதிர் விண் தொலைக் காட்டி (Infrared Space Telescope) ஆகும்.
இதன் லாஞ்ச் தினம் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளிப் போடப் பட்டிருந்த நிலையில் இறுதியாக நாளை கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 5:50 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது.
பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள், குவாசர்கள் போன்றவை மட்டுமன்றி உயிர் வாழத் தேவையான Exoplanets எனப்படும் வெளிப்புறக் கிரகங்கள் வரை இந்த நூற்றாண்டின் இனி வரும் தலைமுறை விஞ்ஞானிகளுக்கான பிரபஞ்சவியலின் உயிர் நாடியான பல விடயங்களை இந்த விண் தொலைக் காட்டி ஆராயவுள்ளது. இது தற்போது விண்ணில் செயற்பட்டு வரும் ஹபிள் தொலைக் காட்டியை விட நூறு மடங்கு செயற்திறன் மிக்கதாகும்.
ஏரியான்-5 ரக ராக்கெட்டு மூலம் இந்த JWST தொலைக்காட்டி நாளை பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப் படவுள்ளது. அமெரிக்காவின் ஆய்வு கூடங்களில் பல நாட்டு விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் இரு தசாப்தங்களுக்கும் மேலாகக் கட்டுமானப் பணியில் இருந்த இந்தத் தொலைக் காட்டி சமீபத்தில் கப்பல் மூலம் பனாமா கால்வாய் ஊடாக ஏவுதளமான பிரெஞ்சு கயானாவை ஏற்கனவே வந்தடைந்துள்ளது.
விண்ணில் ஏவப்பட்டதும் இது பூமியில் இருந்து நிலவு அமைந்துள்ள தூரத்தை விட அதிக தூரத்தில் சூரியனை விலகிய திசையில் ஆர்பிட்டரை வந்தடைந்து தனது ஆய்வுப் பணியைத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. JWST தொலைக் காட்டி தொடர்பான மேலதிக தகவல்களை நாளை 4தமிழ்மீடியாவின் அறிவியல் பகுதியில் எதிர்பாருங்கள்...