ஜுலை 1 ஆம் திகதி வியாழக்கிழமை மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்ற சீனக் கம்யூனிசக் கட்சியின் நூற்றாண்டு விழாவில் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தொனியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்கில் உள்ள தியானென்மன் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்தவிழாவில் தான் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல கலை நிகழ்ச்சிகளும், முப்படையினரின் இராணுவ அணிவகுப்பும் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட 70 000 பேர் கூடிய இந்த சதுக்கத்தில் யாரும் சமூக இடைவெளியைப் பின்பற்றவோ அல்லது முகக்கவசம் அணியவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சுமார் 1 மணித்தியாலத்துக்கு அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார். இதன் போது அவர் சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாக சீனாவின் ஒருமைப் பாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள் தலை சீனப் பெருஞ்சுவரின் இரும்பு மதில்களில் மோதி அழிக்கப் படும் என ஆவேசமாகப் பேசினார்.
இதேவேளை சீனா அளவுக்கதிகமாக அணுவாயுதங்களைக் குவித்து வருவதாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. சுமார் 100 இற்கும் மேற்பட்ட அணுவாயுத ஏவுகணைக் கிடங்குகளை சீனா வைத்திருப்பதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.