சனிக்கிழமை இந்தோனேசியாவின் மிகப் பெரும் தீவான ஜாவாவில் அமைந்துள்ள செமெரு என்ற உயிர் எரிமலை சீற்றம் கொண்டு வெடித்துச் சிதறியதுடன் லாவா குழம்பையும் கக்கத் தொடங்கியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பினால் எழுந்த கரும் சாம்பல் புகை காரணமாக மூச்சுத் திணறியும், இடிபாடுகளில் சிக்கியும் இதுவரை குறைந்தது 14 பேர் பலியாகி உள்ளனர்.
இன்னும் 56 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும், இதில் 41 பேர் லாவா குழம்பின் சிதறலில் சிக்கி எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிய வருகின்றது. செமெரு எரிமலையில் இருந்த வெளியான லாவா குழம்பு அருகே இருந்த குரஹ்கோபோகன் என்ற கிராமத்தை முற்றிலும் சேதமாக்கி, ஒரு முக்கிய பாலத்தையும் சிதைத்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாகியுள்ளன. இறுதியாகக் கடந்த ஜனவரியில் சீறியிருந்த செமெரு எரிமலை இந்தோனேசியாவில் இருக்கும் 120 இற்கும் அதிகமான இயங்கு நிலை உயிர் எரிமலைகளில் ஒன்றாகும்.
மேலும் ஜாவாத் தீவில் அமைந்துள்ள மிக உயரமான மலையும் இந்த செமெரு எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையத்தில் அமைந்திருக்கும் நாடான இந்தோனேசியா பல புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பல அடுக்கு நிலக்கீழ் தகடுகளைக் கொண்டுள்ளது. இதனால் இந்தோனேசியாவானது ஒரு வருடத்தில் அதிகளவு புவியியல் சார்ந்த நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் நாடாகவுள்ளது.