புதன்கிழமை ஜேர்மனியின் மூனிச் நகரின் மிகவும் இயங்கு நிலையில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகே ஒரு கட்டுமானப் பகுதியில், நிலத்துக்குக் கிழ் இருந்த 2 ஆம் உலகப் போரின் போது போடப் பட்ட வெடிகுண்டு ஒன்று தற்செயலாக வெடித்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஒருவருக்கு சற்று மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 ஆம் உலகப் போர் முடிந்து 76 ஆண்டுகள் கடந்தும் ஜேர்மனியில் இப்போதும் வெடிக்காத குண்டுகள் அவ்வப்போது கண்டறியப் படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இது போன்ற 2000 டன் குண்டுகள் கண்டெடுக்கப் படுவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் மூனிச் நகரில் உள்ள டோனர்ஸ்பெர்கர்ப்ரூக் என்ற ரயில் நிலையம் அருகே துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் எதிர்பாராத விதமாக 2 ஆம் உலகப் போரின் போது வீசப்பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டொன்று திடீரென வெடித்துள்ளது.
இந்த வெடிகுண்டு சுமார் 550 பவுண்டு எடை கொண்டது என்றும் கணிக்கப் பட்டுள்ளது. வெடி விபத்து இடம்பெற்ற பகுதியைப் போலிசார் தமது கட்டுப்பாட்டின் கீழ் உடனே கொண்டு வந்ததுடன் அப்பகுதி ரயில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. அண்மைக் காலமாக ஜேர்மனியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டுமான வேலை தொடங்கும் முன் அப்பகுதியில் வெடிக்காத குண்டுகள் இல்லை என சான்றளிக்கப் பட வேண்டும் என்பதுடன், வெடிகுண்டுகள் இருந்தால் சுற்றியிருக்கும் மக்கள் அப்புறப் படுத்தப் பட்டு அக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப் பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை இடம்பெற்ற இந்த வெடிகுண்டு விபத்தின் போது ரயில் தண்டவாளங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பதால் மதிய நேரத்துக்குப் பின் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின.