கிறீஸின் தலைநகர் அதென்ஸின் வடக்குப் பகுதியை கடந்த 4 நாட்களாகக் கடும் காட்டுத் தீயும், வெப்ப அலையும் தாக்கி வருகின்றது.
இன்று வெள்ளி காலை மட்டும் ஆயிரக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இரு நாட்களாக இப்பகுதியில் சனத்தொகை மிகுந்த பகுதிகளிலும், மின்சார இணைப்புக்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களிலும் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க தீயணைப்பு வீரர்கள் கடும் பிரேயத்தனம் எடுத்து வருகின்றனர். அதென்ஸுக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத் தீ காரணமாக பல வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. மேலும் அதென்ஸ் நகரையும், வடக்கு கிறீஸையும் இணைக்கும் அதிவேகப் பாதையிலும் இக்காட்டுத் தீ காரணமாகக் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட பல வீரர்களும், தன்னார்வலர்களும் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 30 வருடங்களில் இல்லாத கடும் வெப்ப அலை கிறீஸின் பல இடங்களில் வீசுவதாகக் கூறப்படுகின்றது. தெற்கு கிறீஸ் ஓரமாக கிட்டத்தட்ட 60 கிராமங்களில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். இனி வரும் நாட்களில் இன்னும் நிலமை மோசமடையலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், 5 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்பன தீயை அணைக்கும் பணிக்காக கொண்டு வரப் பட்டுள்ளன.
தென்கிழக்கு ஐரோப்பாவின் ஒரு சில நாடுகளில் காட்டுத் தீ சமீப நாட்களாகத் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.