சீனாவுடனான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கான எமது கொள்கையை மாற்றிக் கொள்ள அவர்கள் விடுக்கும் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசே பாய்னே தெரிவித்துள்ளார்.
தமது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அடி பணிந்தால் மாட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என சீனத் தரப்பில் கூறப்படுவதாகவும், ஆனால் அவுஸ்திரேலியா இதற்காக எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், இதனால் நாம் அவர்களது கட்டளையை ஏற்க முடியாது என்றும் வியாழக்கிழமை கான்பெராவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.
2018 இல் சீன ஹுவாவெய் மாபைல் நிறுவனத்தின் 5G வலையமைப்பு திட்டத்தைத் தடை செய்ததில் இருந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முறுகல் ஏற்பட்டது. கடந்த வருடம் கொரோனாவின் தோற்றம் குறித்த சுதந்திரமான விசாரணை சீனாவில் நடத்தப் பட வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்த இந்தப் பிளவு மேலும் அதிகரித்தது. இதையடுத்து அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் வைன், பார்லே, இறைச்சி, நிலக்கரி மற்றும் திராட்சை போன்ற பொருட்களுக்கு சீனா தடை விதித்தது.
இந்நிலையில் பாய்னே இன் மறுப்புக்கு கான்பெராவில் உள்ள சீனத் தூதரகம் இன்னமும் பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே இரு தரப்பு முறுகல் இருந்த போதும் அவுஸ்திரேலியாவின் மிகப் பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா இன்னமும் விளங்குகின்றது. மார்ச் முதற் கொண்டு கடந்த ஒரு வருடத்தில் உச்மார் $110.1 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஏற்றுமதியை சீனாவுக்கு அவுஸ்திரேலியா அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.