ஐரோப்பிய நாடான கிறீஸில் புதன்கிழமை காலை 6:08 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் க்ரிட்டி என்ற தீவை மையமாகக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக் கடல் நில அதிர்வு மையமான EMSC தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், இதனால் பலத்த சேதமோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்படவில்லை.
இதேவேளை ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு கொர்டாபோன் மாகாணத்தில் உள்ள கார்டோமில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் புஜா என்ற கிராமத்திலுள்ள தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 38 பேர் பலியாகியுள்ளனர். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி தொழிலாளர்கள் சுரங்கத்தில் இறங்கியதே அவர்கள் விபத்தில் சிக்கக் காரணம் என்று கூறப்படுகின்றது.
சூடானில் ஆண்டொன்றுக்கு சுமார் 93 டன் அளவில் தங்கம் தோண்டி எடுக்கப் படுவதாகப் புள்ளி விபரம் கூறுகின்றது.