ஈக்குவடோர் நாட்டில் உள்ள சிறைச் சாலை ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 116 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் குயாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் துறைமுக நகரான குயாகுவில் உள்ள சிறைச்சாலையில் தான் இந்த வன்முறை இடம் பெற்றுள்ளது.
இரு தினங்களுக்கு முன் லாஸ் வெகோஸ் மற்றும் லாஸ் கேனரஸ் என்றழைக்கப் படும் இரு கைதிகள் குழுக்களுக்குடையே ஏற்பட்ட கடும் மோதலில் கூர்மையான ஆயுதங்களால் இவர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். மேலும் துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் கூட இவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிய வருகின்றது.
கலவரம் அத்துமீறி சென்றதால் அதனைக் கட்டுப்படுத்த போலிசார் மட்டுமன்றி இராணுவத்தினரும் வரவழைக்கப் பட்டனர். 5 மணி நேரப் போராட்டத்தின் பின் வன்முறை முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. 52 பேருக்கும் அதிகமானவர்கள் படு காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் இவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.