உலகளவில் தற்போது மிக வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டின் காரணமாக கோவிட்-19 இற்கு எதிரான போர் திசை திரும்பியிருப்பதாகவும், இதனால் மீண்டும் சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய தடுப்பு மருந்து முன்னுரிமை மற்றும் பல நாடுகளில் மீண்டும் பொது மக்கள் இடங்களில் முகக் கவசம் அணிதல் ஆகியவை நடைமுறைக்கு வரவேண்டி இருப்பதாகவும் CDC எனப்படும் அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலில் இனம் காணப் பட்ட இந்த டெல்டா மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகின்றது. இது சிக்கன்பொக்ஸ் இற்கு இணையான தொற்றையும், ஒரு பொதுவான காய்ச்சலை விட மிக அதிக விளைவு மிக்கதாகவும், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மூலமாகக் கூடப் பரவக் கூடியது என்றும் தெரிவிக்கப் படுகின்றது. இது முந்தைய கொரோனா மாறுபாடுகளை விட பாதிக்கப் பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மிக மோசமான உடல் நலக் கேட்டினை ஏற்படுத்தக் கூடியது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
ஆனாலும் கோவிட்-19 இற்கான தடுப்பூசி பெற்றவர்களை விட பெறாதவர்களுக்கே இந்த டெல்டா மாறுபாட்டினால் 10 மடங்கு மோசமான உடல் நலக் குறைவு ஏற்படுகின்றது என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இதேவேளை டெல்டா மாறுபாட்டினால் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவின் 4 ஆவது அலை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
22 மத்திய கிழக்கு நாடுகளில் 15 இற்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி வரும் இந்த டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே கடுமையாகப் பாதித்து வருவதாகவும் தெரிய வருகின்றது.