நேபாலின் புதிய பிரதமர் ஷேர் பஹடுர் டெயுபா மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தப் படுகின்றது.
நேபால் நாட்டு சட்டத்தின் படி பிரதமராக நியமிக்கப் பட்ட ஒருவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தப் பட வேண்டுமென்றால் அது அவரது நியமனத்தின் பின் 30 நாட்களுக்குள் நிகழ்த்தப் பட வேண்டும்.
நேபாலின் பிரதமராக 2015 ஆமாண்டு முதல் 3 தடவை பணியாற்றிய சர்மா ஒலி ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பத் தவறியமை போன்ற பல விவகாரங்களுக்காக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து டெயுபா பிரதமராக நியமிக்கப் பட்டு தற்போது ஒரு வாரமே ஆகியுள்ளது.
முன்னதாக மே 22 ஆம் திகதி 275 உறுப்பினர்கள் அடங்கிய நேபால் பாராளுமன்றத்தின் கீழவை கலைக்கப் பட்டதன் பின் அங்கு நிகழ்த்தப் படும் முதலாவது ஒன்று கூடல் இன்று இடம்பெறும் நம்பிக்கை வாக்கெடுப்பாகும். இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்று பிரதமராக நீடிக்க டெயுபாவுக்கு குறைந்தது 136 வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின் 271 உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்றத்தில் 50% வீதம் அதாவது 136 வாக்குகள் டெயூபாவுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் அவசியமாகும்.
இந்நிலையில் கணிசமான அளவு எதிர்க்கட்சிகள் டெயுபாவுக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என்று ஊகிக்கப் படுகின்றது.