ஆப்கானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பெரும்பாலும் வாபஸ் பெற்றுள்ள நிலையில் அங்கு அண்மைக் காலமாக தலிபான்கள் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்து வந்துள்ளது.
தலிபான்களுடனான மோதல்கள் இடம்பெறும் இடங்களில் ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தும் வருகின்றனர்.
இந்த மோதல்களுக்கு மத்தியில் சனிக்கிழமை மீண்டும் ஆப்கான் அரசியல்வாதிகளும், தலிபான்களது பிரதிநிதிகளும் கட்டார் தலைநகர் டோஹாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த இரு தசாப்தங்களாக ஆப்கானில் நிலவி வரும் குழப்ப நிலை அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் படைகளின் வாபஸுக்குப் பின்பு மிகவும் அதிகரித்துள்ளது. தலிபான்களின் முற்றுகையினால் பல மாவட்டங்களும் எல்லைகளும் கைப்பற்றப் பட்டு அரசுக்கு நெருக்கடி பன்மடங்காகியுள்ளது.
2020 செப்டம்பர் முதற்கொண்டு டோஹாவில் இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இவ்வருடம் செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் ஆப்கானில் இருந்து சர்வதேச துருப்புக்கள் முற்றாக வெளியேற இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய மோதல்களில் டக்கார் மாகாணத்தில் இருந்து மட்டும் சுமார் 12 000 குடும்பங்கள் வெளியேறியுள்ளன. தெற்கு கந்தஹாரில் பாகிஸ்தான் எல்லையோரமாக கடும் சண்டை நீடிக்கின்றது.
ஜனவரி முதற்கொண்டு 270 000 ஆம் ஆப்கானியர்களும் இதுவரை மொத்தம் 3.5 மில்லியன் மக்களும் ஆப்கானில் வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக ஐ.நா அகதிகள் பிரிவின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இதேவேளை வெள்ளிக்கிழமை கந்தஹாரின் ஸ்பின் பொல்டாக் என்ற பாகிஸ்தான் எல்லைப் பகுதியினைக் கைப்பற்ற தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் தப்பிக்க முயன்ற போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டானிஷ் சித்திக் கொல்லப் பட்டுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற புலிட்சர் விருது பெற்ற டனிஷ் சித்திக் மறைவுக்கு தாம் பொறுப்பில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரின் மறைவுக்கு ஆப்கான் அதிபர் உட்பட பல சர்வதேசத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.