ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க அதிகாரிகள் மற்றும் துருப்புக்களின் நிலைகள் மீது கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 3 ராக்கெட்டு மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
அமெரிக்க துருப்புக்கள் தங்கியிருந்த ஈராக்கின் அயின் அல் அசாட் என்ற விமானத் தளம் ஒன்றின் மீது குறைந்தது 14 ராக்கெட்டுக்கள் வந்து தாக்கியதில் இரு அமெரிக்க நபர்கள் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், ஈராக்கிலும், சிரியாவிலும் தங்கியிருக்கும் ஈரானின் ஆதரவுடையை போராளிகளால் இது நிகழ்த்தப் பட்டிருக்கலாம் என ஊகிக்கப் படுகின்றது. கடந்த மாதம் அமெரிக்க விமானத் தாக்குதல்களில் தமது 4 உறுப்பினர்கள் கொல்லப் பட்டமைக்கு பழிவாங்கும் முகமாக இத்தாக்குதல் நடத்தப் பட்டிருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.
மத்திய கிழக்கில் ஆப்கானில் இருந்து அமெரிக்க சர்வதேச துருப்புக்கள் பெருமளவு வாபஸ் பெற்றுள்ள நிலையில், ஆப்கானிலும் தலிபான்களின் கை ஓங்கி வருகின்றது. முக்கியமாக பக்ரான் விமானத் தளத்தில் இருந்து அமெரிக்கா முற்றிலும் வெளியேறி இருப்பது தலிபான்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பக்ரானில் உள்ள சிறைச்சாலையில் சுமார் 5000 தலிபான்கள் கைதிகளாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நேட்டோ துருப்புக்கள் முற்றாக வெளியேறி வரும் நிலையில் தலிபான்களுக்கும், ஆப்கான் அரச படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தீவிரமடைந்தால் சுமார் 5 இலட்சம் அகதிகள் பாகிஸ்தானுக்கு வர நேரிடும் என்றும் பாகிஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்கானில் இருந்து வரும் அகதிகளைத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் நெருக்கடி கொடுத்து வருகின்றது.