நேற்றைய தினம் ரஷ்யாவில் 28 பேருடன் பயணித்த அன்டோனோவ் அன்-26' ரக விமானம் ஒன்று மாயமானது. இதனையடுத்து விமானத்தை தேடும் பணியின் போது விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து பலானா நகருக்கு நேற்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 22 பயணிகளும் 6 சிப்பந்திகள் உட்பட 28 பேர் பயணித்தனர். இந்நிலையில் இவ் விமானம் பலானா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ரஷிய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. தொடர்ந்து பல மணி நேர தேடுதலுக்கு பின் மாயமான விமானத்தின் சிதைவுகள் பலானா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. இச் சிதைவுப்பாகங்கள் கடலிலும் தரையிலும் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த 28பேரின் நிலை குறித்தும் விபத்திற்கான காரணம் குறித்தும் தெளிவாக இன்னும் அறியப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.