100 வயதில் காலமான மோடியின் தாயார்! : உலகத் தலைவர்கள் இரங்கல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வெள்ளிக்கிழமை அஹமதாபாத் மருத்துவ மனையில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தகனத்துக்காக அவரது உடலைச் சுமந்து சென்றார். மேலும் காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப் பட்டது.
பிரதமர் மோடியின் தாயாரின் மரணத்துக்கு இந்திய அரசியல் தலைவர்களும், சர்வதேசத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். அமெரிக்க அதிபர் ஜோ பைடென் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜூன் மாதம் தான் ஹீராபென் தனது நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடி இருந்தார்.
இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தாயாரின் ஈமக் கிரியைகளுக்குப் பின் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரதமர் மோடி, நூறாண்டு காலம் எனக்கு வழிகாட்டியாக வாழ்ந்த உன்னத ஆத்மா இறைவனின் திருவடிகளை அடைந்து விட்டது. தூய்மையான சுயநலமற்ற கர்ம யோகத்தை அவரிடம் இருந்தே நான் கற்றுக் கொண்டேன் என்றுள்ளார்.
சீனாவில் கோவிட் நிலமை குறித்து விளக்கம் கேட்கும் உலக சுகாதார அமைப்பு
சீனாவில் மீண்டும் கோவிட் தொற்றுக்களும் அதனால் அங்கு ஏற்பட்டு வரும் மரணங்களது எண்ணிக்கை தொடர்பிலும் உண்மை நிலவரம் என்னவென்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பான WHO கோரிக்கை விடுத்துள்ளது.
நவம்பரில் அங்கு ஷீரோ கோவிட் கொள்கை தளர்த்தப் பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென்கொரியா, இத்தாலி, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கான கொரோனா சான்றிதழைக் கட்டாயமாக்கியுள்ளன.
சீனா கோவிட் புள்ளி விபரம் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், தற்போதைய நிலவரப்படி அங்கு தினசரி தொற்றுக்கள் 10 இலட்சமாகவும், இறப்புக்கள் 9000 ஆகவும் இருக்கலாம் என பிரிட்டனின் Airfinity என்ற சுகாதாரப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் உலகளவில் கோவிட் பெரும் தொற்றைக் கட்டுப்படுத்த முயன்று வரும் முக்கிய நிறுவனமான உலக சுகாதார அமைப்பு, சீனாவிடம் இருந்து கோவிட் புள்ளி விபரம் மற்றும் அங்கு தற்போது அமுலில் இருக்கும் தடுப்பூசித் திட்டம் தொடர்பில் திருத்தமான தகவல்கள் கிடைத்தால் மாத்திரமே அது சர்வதேசத்துக்கும் மீண்டும் சுதாரித்துக் கொள்ள உரிய வாய்ப்பை அளிக்கும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மியான்மார் முன்னால் அரச தலைவர் ஆங் சான் சூகி இற்கு 33 ஆண்டுகள் சிறை!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மாரின் முன்னால் அரச தலைவரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான ஆங் சான் சூகி இற்கு மியான்மாரின் இராணுவ நீதிமன்றம் 33 ஆண்டு காலமாக நீடித்து சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2021 ஆமாண்டு பெப்ரவரியில் மியான்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து பதவி நீக்கம் செய்யப் பட்ட ஆங் சான் சூகி மீது முன்பு 2020 இல் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு செய்யப் பட்டது உட்பட சில முக்கிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன.
மேலும் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக கடந்த ஜூலையில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. இதில் ஒருவர் ஆங் சான் சூகியின் ஆட்சியில் எம்பியாக இருந்தவர் ஆவார். இந்த மரண தண்டனைக்கு சர்வதேசத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு முன்பும் இராணுவ ஆட்சி நிலவிய போது மக்களாட்சியை வலியுறுத்திப் போராடிய காரணத்தினால் ஆங் சான் சூகி பல ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தார். இதற்காக அவருக்கு 1991 ஆமாண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது.
கியேவில் மோசமான வான் தாக்குதல் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உக்ரைன் தலைநகர் கியேவ் மீது ரஷ்யா டிரோன் விமானங்கள் மூலம் மிகத் தீவிரமான குண்டுத் தாக்குதலை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளது. முன்னைய தினம் உக்ரைன் மீது சுமார் 120 ஏவுகணைகளை ஏவியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு 2 மணியளவில் ரஷ்யா கியேவ் மீது பாரிய தாக்குதலை முன்னெடுக்கலாம் எனவும் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் நகர நிர்வாகம் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்தது.
கியேவில் இருந்து 20 Km தொலைவில் வான் தாக்குதலில் ஈடுபட்டிருந்த 16 டிரோன்களும் அழிக்கப் பட்டதாகவும், அவை ஈரானில் தயாரிக்கப் பட்ட டிரோன்கள் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு வழங்கப் பட்ட தமது டிரோன்கள் போருக்கு முன்பு அளிக்கப் பட்டவை என ஈரான் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தென்கொரிய வான் பரப்பில் வடகொரியா வெள்ளிக்கிழமை 3 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ளது. இவற்றுடன் 5 டிரோன் விமானங்களையும் தென்கொரிய வான் பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் வடகொரியா பறக்க விட்டுள்ளது. இதில் ஒரு விமானம் தலைநகர் சியோலின் தென்பகுதியில் பறந்துள்ளது.
இந்த டிரோன் விமானங்களை சுட்டு விழுத்தும் முயற்சி தோல்வியடைந்ததாகத் தென்கொரியா தெரிவித்துள்ளதுடன், ஏவுகணை சோதனையை வன்மையாகக் கண்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் 38 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ள வடகொரியா, 2017 ஆமாண்டுக்குப் பின் முதன் முறையாக டிரோன்களை செலுத்தியும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
தனது 95 ஆவது வயதில் காலமானார் முன்னால் போப் பெனெடிக்ட் XVI
சனிக்கிழமை முன்னால் பாப்பரசரான போப் எமெரிட்டுஸ் பெனெடிக்ட் XVI தனது 95 ஆவது வயதில் வத்திக்கான் மடாலயத்தில் காலமாகியுள்ளார். இவருக்கு உலகத் தலைவர்களும், மதத் தலைவர்களும் தமது அஞ்சலிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 600 வருடங்களுக்குப் பின் தான் இறக்கும் முதல் தனது முதுமை காரணமாக பாப்பரசர் பதவியைத் துறந்த முதலாவது போப் இவர் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் தற்போதைய பாப்பரசர் போப் பிரான்சிஸ் தலைமையில் வியாழக்கிழமை வத்திக்கான் சிட்டியில் உள்ள செண்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை முதல் செண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் பசிலிக்கா அரண்மனையில் பொது மக்கள் அஞ்சலிக்காக பெனெடிக்ட் XVI இன் உடல் பார்வைக்கு வைக்கப் படும் என்றும் இவரது விருப்பப் படியே இவரின் இறுதிக் கிரியைகள் அனைத்தும் மிக எளிமையாக நடாத்தப் படும் என்றும் வத்திக்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.