சீனாவில் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள் : வைத்திய சாலை வசதிகளை திறன் படுத்தும் அரசு
அண்மையில் பொது மக்கள் எதிர்ப்பை அடுத்து ஷீரோ கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியதாலும், அங்கு பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டாலும், சீனாவில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதுடன் மரணங்களும் சற்று அதிகரித்துள்ளன. மருத்துவ மனைகளின் தேவைகள் அதிகரித்திருப்பதால், படுக்கை வசதிகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சை முறைகள் என்பன சீன அதிகாரிகளால் மேம்படுத்தப் பட்டு வருகின்றன.
தலைநகர் பீஜிங்கில் செவ்வாய்க்கிழமை மட்டும் 5 கோவிட் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற மயானங்களில் சடலங்கள் குவிந்து வருவதாகவும், இறுதிச் சடங்கு செய்யும் சேவை நிறுவனங்களது பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. சீனாவில் கோவிட் மரணங்கள் அதிகரித்து வருவது சர்வதேசத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வகை ஆபத்தான கோவிட் மாறுபாடுகள் பரவலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதுவரை பாரியளவில் சீனாவில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படவில்லை.
சுமார் 1.4 பில்லியன் சனத்தொகை கொண்ட நாடான சீனாவில் 2019 முதல் ஏற்பட்டிருக்கும் கோவிட் மரணங்கள் மாத்திரம் 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறைந்த பட்ச தடுப்பு மருந்து செலுத்துகையும், அவசர சிகிச்சைப் பிரிவுக்கான போதுமான முதலீடு இல்லாமையும் அரசின் முக்கிய குறைபாடாகக் கருதப் பட்டன.
வடக்கு கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் : 10 000 பேருக்கு மின் துண்டிப்பு
செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவை 6.4 ரிக்டர் அளவுடையை நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாதைகளில் சிறியளவான சேதமே ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனினும் அதிகாலை ஏற்பட்ட இந்த அதிர்வால் தூக்கத்தில் இருந்த மக்கள் பதற்றத்துடன் கட்டடங்களை விட்டு வெளியேறினர். மேலும் சுமார் 10 000 பேர் வரை குடியிருப்புக்களுக்கு மின் துண்டிக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. நிலநடுக்கம் அதிகாலை 2:34 மணிக்கு Fortuna என்ற இடத்திலிருந்து 15 மைல் தொலைவில் பசுபிக் சமுத்திரத்தில் மையம் கொண்டிருந்தது. குறித்த பாரிய அதிர்வைத் தொடர்ந்து 4.6 ரிக்டர் அளவுடைய 3 தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
முக்கியத்துவம் மிக்க உயிர்ப் பல்வகைமை ஒப்பந்தத்துடன் நிறைவு பெற்ற COP15 மாநாடு
19 ஆம் திகதி திங்கட்கிழமை கனடாவின் மாண்ட்ரியல் நகரில் நிறைவுற்ற ஐ.நாவின் பருவநிலை மாநாடான COP15, முக்கியத்துவம் வாய்ந்த உயிர்ப்பல் வகைமை ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி 10 ஆண்டுகளில் பூமியின் 30% நிலம் மற்றும் கடற் பகுதிகளை பாதுகாப்பது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.
இதற்கு 188 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்காது விட்டாலும் குறித்த உடன்பாட்டினை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது. குறித்த இலக்கை அடைய குறைந்த பட்சமாக சுமார் 824 பில்லியன் டாலர் நிதி தேவை எனக் கணக்கிடப் பட்டுள்ளதுடன், பல்லுயிர்ச் சூழல் மற்றும் காடுகளைப் பாதுகாக்க சுமார் 23 முக்கிய இலக்குகளும் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
ஆனாலும் குறித்த நிதியுதவி ஏழை நாடுகளுக்குப் போதாது என்றும், குறித்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும் சில நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன. Global Biodiversity Framework சுருக்கமாக GBF எனப்படும் இந்த ஒப்பந்தத்தை எட்ட கடந்த 2 கிழமைகளாக இடம்பெற்ற மாநாட்டை கனேடிய அரசு மத்தியஸ்தம் வகித்தது.
எமது பூமியில் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதி அப்போது கோலோச்சியிருந்த டைனோசர் இனங்கள் பூண்டோடு அழிந்த பின்பு இப்போது நிகழும் நிகழ் காலத்தில் தான் பூமியில் உயிரினங்கள் மனிதனின் செயற்பாட்டின் காரணமாகப் பேரழிவை எதிர் நோக்கியிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இன்று எமது பூமியில் இருக்கும் 1 மில்லியன் தாவரங்களும், உயிரின வகைகளும் பேரழிவை எதிர் நோக்கியிருப்பதாகவும் இதில் பெரும்பான்மை இன்னும் சில தசாப்தங்களிலேயே நிகழ வாய்ப்புள்ளதாகவும் அதிர்ச்சிகரத் தகவலை நிபுணர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் பெண்கள் பல்கலைக் கழகங்களில் படிக்கத் தடை விதித்த தலிபான் அரசு
ஆப்கானில் 20 ஆண்டுகளுக்குப் பின்பு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு கடந்த 2021 ஆமாண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். அதன் பின் அங்கு பொது மக்கள் எதிர்ப்பார்த்த படியே படிப்படியாக பெண்களது உரிமைகள் பறிக்கப் பட்டு வந்தன. தற்போது உச்சக் கட்டமாக பெண்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தேர்வாகிப் படிப்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியே சென்றால் கட்டாயம் புர்கா அணிதல், நெயில் பாலிஷ் செய்யத் தடை, வேறு ஆண்களுடன் பேசத் தடை, அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லத் தடை எனப் பல கட்டுப்பாடுகள் இருப்பதுடன் மீறினால் மோசமான தண்டனைகளும் அமுலில் உள்ளன. மார்ச் மாதம் 5 ஆம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயிலத் தடை விதிக்கப் பட்டதால் பெண்களுக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப் பட்டன. இச்சட்டத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததால் இப்பள்ளிகளும், கல்லூரிகளும் மீண்டும் திறக்கப் பட்டன.
ஆனால் இப்போது மீண்டும் ஆப்கானின் அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் பெண்கள் கல்வி பயில உயர் கல்வி அமைச்சகம் தடை விதித்திருப்பதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
200 றோஹிங்கியா அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் படகை மீட்க கோரிக்கை!
தென்கிழக்கு ஆசிய அரசியலாளர்கள் செவ்வாய்க்கிழமை விடுத்த வேண்டுகோளில், பல பெண்கள், குழந்தைகள் அடங்கலாக சுமார் 200 றோஹிங்கியா அகதிகளுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் படகை மீட்குமாறு தெற்காசிய நாடுகளுக்குக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இந்தப் படகு பல கிழமைகளாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவுக்குச் சொந்தமான அந்தமான் கடலில் மலாகா
நீரிணையில் தத்தளிப்பதாகக் கூறப்படுகின்றது.
மலாக்கா நீரிணை உலகின் மிகவும் முக்கிய கடல் வர்த்தகம் நிகழும் கப்பற் பாதையாகும். பௌத்த பெரும்பான்மை நாடான மியான்மாரில் சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பல தசாப்தங்களாகத் துன்புறுத்தப் பட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் கடந்த காலத்தில் அகதி அந்தஸ்து தேடி மோசமான தரம் கொண்ட படகுகளில் மிக அதிகளவில் பயணித்து மலேசியா அல்லது இந்தோனேசியாவை அடைய முற்பட்டுள்ளனர்.
இதில் பல நூற்றுக் கணக்கானவர்கள் விபத்தில் சிக்கி மரணித்தும் உள்ளனர். இந்நிலையில் மலாக்கா நீரிணையில் தற்போது தத்தளித்து வரும் படகை மீட்குமாறு ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளுக்குத் தான் அவசர கோரிக்கை விடுப்பதாக முன்னால் இந்தோனேசிய அமைச்சர் எவா சுந்தாரி என்பவர் APHR எனும் மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதேவேளை ஐ.நாவின் அகதிகள் அமைப்பான UNHCR கடந்த வாரம் தெரிவித்த தகவலில் நவம்பர் இறுதியில் இருந்து இந்தப் படகு தனித்து விடப் பட்டுள்ளதாகவும், குறைந்தது 12 பேர் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம் என்றும், எஞ்சியவர்களும் குடிநீரோ, உணவோ இன்றி தவித்து வருவதாகவும் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது.
டிசம்பர் 8 ஆம் திகதி பங்களாதேஷின் அகதிகள் முகாமில் இருந்து இந்தோனேசியா நோக்கி 150 றோஹிங்கியாக்களுடன் சென்ற படகு தாய்லாந்து கடற்கரையருகே மீட்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.