ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பழிவாங்கும் நோக்கில் தம்மைக் குற்றவாளியாக்க முயற்சிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் தான் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதை அடுத்து ஜனாதிபதி ஏன் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்கிறார் என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
“என் உயிருக்கு ஆபத்து உள்ளது, இன்றோ நாளையோ நான் கொல்லப்படலாம். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜனாதிபதியும் அவரது ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
இடைக்காலக் குழுக்களை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அமைச்சரவை அமைச்சர்களுக்கு உரிய முறையில் விளக்கமளிக்காமலும் தான் இல்லாத நிலையிலும் அரசாங்கம் அத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்னர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.