இலங்கையில் நாடு முழுவதும், “Go Home Gota” எனும் கோசங்களுடன் போராட்டங்கள் நடந்து வருகையில், இன்று பாராளுமன்றத்துக்குள் அந்தக் கோஷங்களுடனான போராட்டம் நடைபெற்றது.
காலை 10 மணிக்குப் பாராளுமன்றம் கூடிய போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், “Go Home Gota” என்ற பதாகைகளை தாங்கிவாறு சபைக்குள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சபையின் மத்திக்கு வந்த அவர்கள், “Go Home Gota” என்ற பதாகையை உயர்த்திக் காண்பித்து கோஷமெழுப்பினர். இதனையடுத்து சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதன் பின்னதாக அவை தொடர்ந்த போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பேசுகையில், " 69 இலட்சம் பேர் வாக்களித்து தெரிவான ஜனாதிபதி ஒரு போதும் பதவி விலக மாட்டார் என்பதை அரசாங்கம் என்ற விதத்தில் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம் " எனக் குறிப்பிட்டார்.
இன்று காலை பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமாகிய போது, சபாநாயகர் உரையாற்றுகையில், " நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளுடன் கடுமையான உணவு தட்டுப்பாடும் ஏற்படக்கூடும். ஆகவே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு, இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான திட்டத்தை வகுக்கு உதவ வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.