பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடல் இன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்திரா ஜயசூரியவின் மேற்பார்வையில் கீழ் இன்று(25) காலை சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
பொரளை பொது மயானத்தில் தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அகழ்வு பணியின் போது மறைந்த ஷாஃப்டரின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட நீதித்துறை மற்றும் சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய ஐவர் அடங்கிய குழு வெள்ளிக்கிழமை (19) சடலத்தை தோண்டி எடுப்பதற்கு அனுமதியளிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியது.
விசேட நிபுணர் குழுவின் கோரிக்கைக்கு அமைய வர்த்தகரின் உடலத்தை தோண்டி எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பொரளை பொது மயானத்தில் தனது காரில் கை கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.