இலங்கை மலையகத்தில் நேற்று நடைபெற்ற மேதின நிகழ்வில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு.அண்ணாமலை, இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொண்ட பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைத்தளத்தில், " இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய நல்லை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன். இலங்கையில் இருக்கக்கூடிய ஒரே சைவ மடம் என்பது பெரும் சிறப்பு. மதுரை ஆதீனத்தின தொப்புள் கொடி உறவு இந்த ஆதீனத்திற்கு இருக்கிறது!" எனக்குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன், யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.
பின்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களையும் சந்தித்தார். இச் சந்திப்பில், மாவை சேனாதி ராஜா , செய்தி தொடர்பாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ. சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன் Dr.சத்யலிங்கம் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.