இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை உறுதி செய்தார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக கூட்மைப்பு வாக்களிக்க வேண்டியிருக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், " பிரதமர் பதவி விலகினால் இன்னொரு பிரதமர் வருவார். அவருடன் இணைந்து புதிய அமைச்சரவை உருவாகும். அவ்வாறு உருவாகும் அமைச்சரவை தற்போதுள்ள அமைச்சரவையை விட மிகவும் கொடூரமான அமைச்சரவையாக இருக்குமாக இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். எனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பதன் மூலமே நாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படும். அதைத் தவிர்த்து, இந்த நாட்டில் எவர் பிரதமர் பதவிக்கு வந்தாலும் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை" என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பது தொடர்பில் நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் ஆராய்ந்து முதல்கட்டமாக ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
இதேவேளை காலிமுகத்திடல் முன்னெடுக்கப்படும் “கோட்டா கோகம” போராட்ட களத்திற்கு அருகாமையில், கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.