இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் காரணமாக, நாடு முழுவதற்குமான அவசரகாலச்சட்டம் , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் நேற்று முதல் இந்த அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, நேற்று முன் தினம் மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதானவர்கள் எண்ணிக்கை 54 எனவும், இவர்களில் 6 பேர்களை வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும், 48 நபர்களுக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், இவர்களுக்காக வாதாடுவதற்கு சுமார் 400 வழக்கறிஞர்கள் தாமகவே முன்வந்திருந்ததாகவும் தெரிய வருகிறது.
நேற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று கைகலப்பில் முடிந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட கடன் வசதியின்அடிப்படையில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் மூலம் இலங்கை வந்தடைந்துள்ளது. இன்று மாலை டீசல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரும் டீசலில் மின்சார சபைக்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நான்கு மணி நேரத்துக்கும் குறைவான மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.