ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இறுதி மோதல்கிளன் போது காணாமற் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் அமைத்த ஆணைக்குழுவே தெரிவித்துள்ளது.இந்நிலையில் அவர்களை கண்டறிய அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றுவதற்கு எடுக்கும் கண்துடைப்பு நடவடிக்கைகளை முழு உலகமும் விளங்கிக்கொள்ள வேண்டும். உண்மைக்கு புறம்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அரசாங்கம் தம்மை நல்லவர்களாக காட்ட முயற்சிக்கும் நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கம் இன்று கொண்டுவந்துள்ள திருத்த சட்டங்களை நாம் வரவேற்கின்றோம். இந்த திருத்தங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதில் மிகமுக்கியமாக நீதிபதிகள் சிறைச்சாலைக்கு சென்று அதேபோல் தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடுவது, தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு சித்திரவதை நடந்துள்ளதா, அவர்கள் ஆரோக்கியமானவர்களாக என்பதை அவதானிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தில் இது நல்லதாக இருந்தாலும் யதார்த்தம் எப்படி இருக்கும் என்பது எமக்கு தெரியும். ஆனால் இப்போது ஏன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எமது சுயாதீனத்தை பாதுகாப்போம் எனத் தெரிவித்த அவர், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனக் கூறிக்கொண்டு யாரை முட்டாளாக்க இந்த திருத்தங்களை கொண்டு வருகின்றீர்கள்.” என்றுள்ளார்.