மலையகத்தில் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு இங்குள்ள வைத்தியசாலைகளில் வைத்து, சிகிச்சை வழங்குவதற்கு போதியளவு கட்டில்கள் இல்லை. ஆகையினால் அவர்களை, வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டிய நிலைமையே அதிகம் காணப்படுகின்றது.
நுவரெலியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சடுதியாக அதிகரிப்பதற்கு ஆடைத் தொழிற்சாலைகள்தான் பிரதான காரணமாக இருக்கின்றன.குறித்த ஆடைத்தொழிற்சாலைகளுக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து ஊழியர்கள் வருகை தருகின்றனர்.
ஆகையினால் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். ஆகையினால் அவர்களுக்கும் முன்னுரிமையின் அடிப்படையில் கொவிட் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.