வடக்கு கிழக்கிலுள்ள தமிழர் தாயக நிலத்தினை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், இந்நாட்டின் நிலங்களைச் சீனர்களுக்கு வழங்குவதை வேடிக்கைப் பார்த்து வருகின்றனர் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“எமது நாட்டு அரசாங்கம், சீனாவுக்கு முன்பாக அடிப்பணிவை அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களுக்கு 13ஆவது திருத்தத்தின்படி கிடைக்க வேண்டிய அதிகாரங்களைக்கூட வழங்காதவர்கள், இந்நாட்டின் கடலையும் நிலத்தையும், தூரத்தில் உள்ள சீனர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தின் மீதான நேற்றைய (புதன்கிழமை) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிற அரசாங்கத்தின் கொள்கை, இன்று எங்குப் போனது, நாடு முழுவதும் சீனச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா?” என்றுள்ளார்.