இந்தியாவின் மோகித் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜோர்டானில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 61 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் இந்தியாவின் மோகித் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிச்சுற்றில் அவர் ரஷிய வீரர் எல்டார் அக்மதுனினோவை 9-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
2019-ம் ஆண்டில் வெற்றி பெற்ற தீபக் புனியாவிற்குப் பிறகு, U-20 உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை மோகித் குமார் பெற்றுள்ளார்.
125 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் இந்திய வீரர் ரஜத் ருஹால் வெண்கலம் வென்றார். இவர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கனடா வீரர் கரன்வீர் சிங்கை 9-8 என்ற கணக்கில் வீழ்த்தினார். ருஹால் வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
மோகித் குமார் தங்கம் வென்ற செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மகிழ்ச்சியாக இருப்பதாக மோகித் குமாரின் தாயார் தெரிவித்தார். மோகித், 2-ம் வகுப்பில் இருந்தே மல்யுத்தம் செய்ய தொடங்கியதாகவும் கூறினார்.