ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை மும்பை அணி பெற்றது பேட்டிங்கில் அதிக பட்சமாக கியெரொன் பொல்லார்ட் 41 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் சென்னை அணி சார்பாக தீபக் சாகர் 4 ஓவர் வீசி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இவர் பந்து வீசிய ஒரு ஓவர் எந்தவொரு ஓட்டத்தையும் கொடுக்காத மேடின் ஓவர் ஆகும்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் மும்பை இந்தியன்ஸின் நிதானமான பந்து வீச்சால் அவ்வப்போது விக்கெட்டுக்களை இழந்தது. இதில் முக்கியமாக 12.4 ஆவது ஓவரில் சென்னை அணி 82 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ரன் அவுட் முறையில் அந்த அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் எம் எஸ் தோனி அவுட்டானார். இந்த அவுட் மூன்றாவது அம்பையர் மூலம் வழங்கப் பட்ட போதும் மிகவும் நுணுக்கமான சர்ச்சைக்குரிய அவுட்டாகவே கருதப் படுகின்றது.
இதை அடுத்து ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மாலிங்கவின் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்கள் விலாசி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 19.4 ஓவரில் அவரும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதிப் பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மாலிங்க வீசிய கடைசிப் பந்தை எதிர்கொண்ட தாகூரின் காலில் அது பட்டு LBW முறையில் அவர் ஆட்டமிழக்க மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவீகரித்தது. இந்த LBW ஆட்டமிழப்பும் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப் படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஷேன் வாட்சன் 59 பந்துகளுக்கு 80 ரன்களைக் குவித்தார். மும்பை அணி சார்பாக லாசித் மாலிங்க 4 ஓவர்கல் வீசி ஒரு விக்கெட்டும் ஜாஸ்பிரிட் பும்ரா 4 ஓவர் வீசி 2 விக்கெட்டும் எடுத்தனர்.
மிகவும் பரபரப்பான ஐபில் இறுதிப் போட்டிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.