இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்தார்.
33 வயதாகின்ற இசுறு உதான, இலங்கை அணி சார்பாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டி20 போட்டியில் 2009 ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அறிமுகமானார். 2012 ஜூலை 26 ஆம் திகதி இந்தியாவிற்கு எதிராக தனது முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.
வேகம் குறைந்த பந்துகளை வீசுவதன் மூலம் எதிரணி துடுப்பாட்டக்காரரை நிலைகுலைய செய்யக்கூடியவர். இந்த வேகம் குறைந்த பந்துகள் டி20 போட்டிகளில் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. துடுப்பாட்ட வரிசையின் இறுதிக்கட்ட துடுப்பாட்டக்காரராக இருந்த போதிலும் தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் அதிகப்பட்ச ஓட்டங்களை குவிக்க கூடியவர். இவரது சிறப்பான துடுப்பாட்டமாக தென்னாபிரிக்க அணிக்கெதிரான டி20 போட்டியில் வெறும் 48 பந்துக்களுக்கு 84 ஓட்டங்களை எடுத்ததை கூறலாம். மேலும் சிறப்பான களத்தடுப்பின் மூலம் இலங்கை அணிக்கு வெற்றிகளை தேடி தந்துள்ளார்.
இசுறு உதானவின் இடத்தை பிரதிபலிக்கக்கூடிய புதிய இளம் வீரருக்கான தேவை இலங்கை அணிக்குள்ளது.