இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி இலகு வெற்றியினை பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று வியாழக்கிழமை (29) கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் நடைப்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் ஷிக்கர் தவான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இப்போட்டிக்கான இலங்கை அணி காயமடைந்த இசுரு உதானவிற்குப் பதிலாக அணியில் பெதும் நிஸ்ஸங்கவிற்கு வாய்ப்பளிக்க, இந்திய கிரிக்கெட் அணியும் நவ்தீப் சைனிக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளரான சந்தீப் வாரியருக்கு டி20 சர்வதேச போட்டிகளில் முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பினை வழங்கியது.
இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பம் முதலே மிகவும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவின் பந்துவீச்சினை எதிர்கொள்வதிலும் பாரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டது. அதன்படி, தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுக்கத் தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் குல்தீப் யாதவ் அதிக பட்சமாக 23 ஓட்டங்கள் பெற்றார். ஏனைய வீரர் எவராலும் குறிப்பிட தக்க ஓட்டங்களை பெற முடியவில்லை. இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வெறும் 9 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வனிந்து ஹஸரங்க, டி20 சர்வதேசப் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினை பதிவு செய்ய இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்கவும் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். மேலும் இலங்கை அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 82 ஓட்டங்களை பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, குறித்த இலக்கினை 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து கடந்தது. இதன் மூலம் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. ஆட்டமிழக்காது இறுதிவரை இருந்த தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் பிரகாசித்த ஹசரங்க துடுப்பாட்டதிலும் ஆட்டமிழக்காமல் 9 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெற்றார். இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ராகுல் சாஹர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கை அணிக்கு சிறிய அழுத்தம் ஒன்றினை உருவாக்கிய போதும் அவரின் பந்துவீச்சு வீணானது.
இந்திய அணிக்கு எதிராக இலங்கை வீரர்கள் கைப்பற்றிய முதல் டி20 தொடராக இந்த தொடர் அமைகின்ற அதேவேளை, இலங்கை அணி 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெற்றி பெறுகின்ற முதல் டி20 தொடராகவும் அமைகின்றது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க தெரிவாகினார்.