வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
மேலும் சச்சினின் நீண்ட நாள் ஆசை இந்த மைதானத்தில் நிறைவேறியது. இங்குதான் இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இது சச்சினின் கடைசி மற்றும் ஆறாவது ஒருநாள் உலகக் கோப்பை என்பது தெரிந்தது.
'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.