பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மொத்தம் 111 பதக்கங்களை வென்றது.
இந்த நிலையில் சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், 44 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 போட்டிகள் கொண்ட இந்த விளையாட்டில் மொத்தமாக 501 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் 28ஆம் தேதி வரையில் நடந்தது. இந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் இந்த பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், பளூதூக்குதல், தடகளப் போட்டி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என்று பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தியா 29 தங்கம் 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக 100 பதக்கங்களை எட்டி வரலாறு படைத்த இந்திய அணியினரை டெல்லியில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பாராட்டியதுடன் அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உங்களைச் சந்திப்பதற்கான வாய்ப்புகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்... ஒரே ஒரு விஷயத்திற்காக நான் உங்களிடையே வந்திருக்கிறேன், அதுவே உங்களை வாழ்த்துவதற்காகவே.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இந்திய விளையாட்டு வீரர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. அவர்களின் சாதனைகள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அசாதாரண திறன்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.