இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 99ஆவது தேசிய மெய்வல்லுனர்
சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.
தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில் ஐந்து இலங்கை சாதனைகளும், 3 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
இதில் பெண்களுக்கான 1,500 மற்றும் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் கயன்திகா அபேரத்ன புதிய இலங்கை சாதனை படைக்க, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சச்சினி பெரேரா, பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா மற்றும் ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் ரொஷான் தம்மிக ஆகியோர் புதிய இலங்கை சாதனைகள் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.
இதில் சச்சினி பெரேரா, சாரங்கி சில்வா ஆகிய இருவரும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவர்களுடன், ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் சமித் மதுஷங்க போட்டி சாதனையொன்றை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.