ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி
“குரூப்-2” பிரிவில் இடம் பெற்றுள்ளது.
2 தோல்வியை தழுவிய இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. எஞ்சிய 3 ஆட்டங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதே நேரத்தில் நியூசிலாந்து ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டும் இந்தியா வாய்ப்பை பெறலாம். இது மிகவும் கடினமான ஒன்றாகும்.
குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் 6 புள்ளியுடனும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளியுடனும், நியூசிலாந்து, நமீபியா தலா 2 புள்ளியுடனும் உள்ளன. இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
இந்திய அணி 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி மட்டுமே வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
கடந்த ஆட்டத்தில் வீரர்கள் தேர்விலும், பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடுவது தான் மிகவும் முக்கியமானது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை ஸ்காட்லாந்து (130 ரன் வித்தியாசம்), நமீபியா (62 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- ஸ்காட்லாந்து (மாலை 3.30) மோதுகின்றன.