இந்த பூமி உள்ளே அனற்குழம்பில் தகித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய தகிப்பினை மறைத்துக்கொண்டு, கடலும், காற்றும், காடும், மலையும், நதியும் என நந்தவனமாய் இயற்கையை இன்பமாக அள்ளிச் சொரிகிறது.
ஆனால் அதன் அனுபவப் பெறுமானம் தெரியா மனிதர்களாக நாம் இயற்கையை அழித்து, எதிர்மறை எண்ணச் சிந்தனைகளை நிரப்பி, எல்லா உயிர்களுக்குமான இந்த இனியபூவுலகை இயன்றவரை எல்லா வழிகளிலும் சீரழித்து வருவது பெருகிவிட்டது. ஆனாலும் " நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு) எல்லார்க்கும் பெய்யும் மழை." எனும் தமிழ் மூதூரைக்கு ஏற்ப, ஆங்காங்கே நடக்கும் நல்ல செயல்களினால்தான் நாம் வாழும் உலகம் இன்று வரை நன்றே சுழல்கிறது.
அவ்வாறான நற்செயல்கள் குறித்த செய்திகள், எதிர்மறைச் செய்திகளின் பேரரெழுச்சியில் காணமற் போய்விடுகின்றன. கவனம் பெற வேண்டிய அல்லது நாம் கவனம் செலுத்த வேண்டிய அத்தகைய செய்திகளை, தினமும் உலகைப் புதிதாய் காணும் வகையில் " நாளும் ஒரு நல்ல செய்தி" என, இன்று முதல் தொகுத்துத் தர விழைகின்றோம்.
- 4Tamilmedia Team
இன்று : 2021 ஜூன் 21. சர்வதேச யோகா தினம்.
மனதுக்கு அமைதியும், உடலுக்கு உறுதியும் தருவது யோகக் கலை. அவசரம், அதிகாரம், பதற்றம் என்பன மிகுந்த இன்றைய உலகிற்கு ஆரோக்கியம் தரக் கூடிய அற்புதக்கலை. அதனை இளம் பராயத்திலேயே பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில், பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக மாற்றிய உலகின் முதல் நாடு சிறப்பினைப் பெறுகின்றது நேபாளம்.
நேபாள் நாட்டின் அரசு சிறுபாரயத்திலிருந்தே குழந்தைகள் மனவலிமை மிக்கவர்களாக வளர்வதை உறுதி செய்யும் நோக்கில் அங்குள்ள பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக மாற்றியுள்ளது. இது குழந்தைகளின் தினசரி சிறந்த அளவிலான மனப்பாங்கைப் பெறுவதை உறுதி செய்கிறது. நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்திட்டத்தில் புதிதாக யோகா கல்வியும் கடந்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் மாணவர்களுக்கு யோகாசனங்களில் மட்டுமல்லாமல், யோக சிந்தனை மற்றும் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் சுய-குணப்படுத்தும் கொள்கைகள் குறித்த வகுப்புகள் குறித்தும் பயிற்சியளிக்கும். பள்ளிகளில் யோகாவை கட்டாய பாடமாக மாற்றிய உலகின் முதல் நாடு நேபாளம் திகழ்வது குறிப்பிடதக்கது.