"நன்றே விளைகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனதென்று அழித்துவிட்டேன் அழியாத குணக்குன்றே அருட் கடலே இமவான் பெற்ற கோமளமே"
அபிராமிப் பட்டர் அன்னையை அபிராமி அந்தாதியில் வாழ்த்தி பாடுகிறார். அவரது நம்பிக்கை வீணாகவில்லை முழு இருட்டு வானில் நிலவு இல்லாத போது அபிராமியின் திவ்விய ஒளியில் தவமியற்றிக்கொண்டு இருந்ததால் அரசன் கேட்ட போது அமாவாசைக்கு பதில் பூரணை என்று கூறியதன் விளைவு, மன்னன் நெருப்புக் குழியின் மேல் அரிதண்டத்தில் கயிறுகளால் கட்டப்பட்ட பலகையில் பட்டரை தொங்க விட்டு விட்டான். நிலவு வரவில்லை என்றால் நெருப்புக்குழியில் விழுத்தி உயிரைப் பறித்துவிடுவேன் என ஆனையிட்டு காத்திருக்கிறான். பட்டரும் அந்தாதி நூறு பாடல்கள் பாடுகிறார்.
அபிராமி தனது காது தோடை கழற்றி வீசி எறிய வானில் நிலவு தோன்றி எங்கும் பிரகாசித்தது. உண்மை பக்தி அபிராமியின் பக்தனான பட்டரை கைவிடவில்லை. இரக்கமிகுந்தவர் அன்னையல்லவா ஆகவே தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து முழுமனதுடன் வழிபட்டால் எமது துன்பங்கள் நீங்கி இன்பம் கிட்டும். நாம் எமது ஆசை பற்றுக்களை நீக்கிவிட வேண்டும். எமை காக்கும் தெய்வம் அன்னை என அவளை சரண் புகுந்து விட்டால் அன்னை எம்மைக் காப்பாள். நல்ல வழியில் தானதர்மங்களை செய்து என்றும் மனநிறைவுடன் நாம் வாழ முயல வேண்டும். அப்போது தீமையை அகற்றி நன்மைகள் பல கைகூடி வர மகாலட்சுமி அருள் தருவாள்.
ஆடிமாதத்தில் பூரம் நட்சத்திரத்திற்கு பின் வரும் வெள்ளிக்கிழமை அன்று நற்கதி அடையவும் பதிவிரதா தர்மத்துடன் என்றும் குறையில்லாது தீர்க்க சுமங்கலியாக வாழவும் வர லட்சுமியை நினைந்து பெண்கள் இவ் விரதத்தை மேற்கொள்வது சிறப்பாகும். வரலட்சுமி விரதம் முறையாக வருடம் ஒருமுறை கடைப்பிடித்து நூல் கையில் அணிவர். இந் நோன்பு நோற்றால் மக்களின் வாழ்வு பல வளங்கள் நிறைந்து காணப்படும். மங்களகரமாக வாழலாம் என்று சிவனார் உமாதேவியாருக்கு உரை செய்துள்ளார். வரலட்சுமி விரதம் எத்தனை மகத்துவம் நிறைந்தது என்பது சாருமதி கதையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மகத நாட்டில் சாருமதி எனப்படுபவள் தனது கணவனையே தெய்வமாகப் பாதபூஜை செய்து வழிபட்டும் மாமனார் மாமியாரிடம் அன்பாகவும், பெரியவர்களிடம் மரியாதையாகவும் நடந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தாள். எப்பொழுதும் அதிகாலைப்பொழுதிலேயே எழுந்து கடமைகளை செய்து கொண்டு இருந்தாள். இவ்வாறு வாழ்ந்து வந்தவருக்கு ஒரு நாள் வரலட்சுமி தேவி கனவில் வந்து
சாருமதியே உன் பதிவிரததன்மையை மெச்சுகிறேன், ஆகையால் ஆடிமாதப் பூரம் நட்சத்திரம் கழிந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று என்னை வழிபாடு செய் .உனக்கு அனைத்து மங்கலங்களும் கிட்டும்,
என்று கூற அவளும் மகாலட்சுமியை வலம் வந்து வழிபட்டு தரிசனம் செய்வது போல் கண்டாள். உண்மையாகவே கண்டது போல் திடுக்கிட்டு எழுந்தாள். தான் கண்டது கணவென அதன் பின் உணர்ந்தாள். தனது காலைக்கடமைகளை செய்தாள். ஆனாலும் மனதில் உறுத்தியது போல் தோன்றவே பெரியவர்களிடம் கனவைப்பற்றி கூறி அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன் படி மாகலஸ்மி சொன்ன அந்நாளுக்காக காத்திருந்தாள்.
அந்த நாளும் வர வரலட்சுமி நோன்பினை முறைப்படி அனுஸ்டித்து தோழிகளுடன் சேர்ந்து சாருமதி பூஜைகள் செய்தாள். வரலட்சுமி பூஜை முடிந்து வலம் வந்து நமஸ்காரம் செய்து எழும் பொழுதில் எல்லாருடைய கால்களிலும் கொலுசுகள் கலகல என ஜொலிக்கக் கண்டனர். அடுத்தசுற்று வலம் வரும் வேளை கழுத்தில் தங்க ஆபரணங்களும் கைகளில் வளையல்களும் கிடைத்தன. மூன்றாவது சுற்றில் வீடுகளில் வாகனங்களும், சாதரண வீடுகள் மாடமாளிகையும் ஆக துளங்கின. அவளும் வரலட்சுமியின் மகிமையை எண்ணி விழுந்து நமஸ்காரம் செய்தாள். லட்சுமியும் அவள் மேல் கருணை மழை பொழிந்தாள். இப்படி வரத்தை தந்து வளமான வாழ்வும் கொடுத்தாள் வரலட்சுமி.
ஆகவே தற்காலத்தில் பரபரப்பான உலகமும், பம்பரமான வேலையும் என்று சுழலுவதை விடுத்து இந்நாளில் தம்மையும் வீட்டையும் சுத்தம் செய்து ஒரு பொழுது உணவு அருந்தி வரலட்சுமியை நினைந்து முறைப்படி திருவிளக்கு, பூஜையில் ஆலயங்களில் கலந்து கொண்டு, வரலட்சுமி ஆவாகனத்தில் இருந்து நூலைப்பெற்று கையில் அணிந்து கொள்ளல் முறையாகும். வாழ்க்கையில் மானிடப்பிறவி எடுத்ததன் பயனாக, நல்லகுடும்பம், நல்லகல்வி, சுகபோகம், குடும்ப ஒற்றுமை யாவும் கிடைத்து வாழ்வின் சகல யோகங்களும் கிடைக்க அம்பிகை எப்பொழுதும் அருள் தருவாள் எனத்துதிப்போம். ஶ்ரீ வரலஸ்மிக்கு மங்களம்.
- 4தமிழ்மீடியாவிற்காக அருந்தா