நான்கு வேதங்களில் ஒன்றான யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமஸ்கிருத மொழியில் அமைந்த, ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம்.
ஸ்ரீ ருத்ரத்தை தினசரி பூசையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும், தியானத்திலும், பாராயணத்திலும் ஜெபிப்பது தொன்று தொட்டு சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்துஜெபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க ஶ்ரீ ரூத்ரத்தை ஆலயங்களில், அபிஷேகம், கொடிஸ்தம்ப பூஜை வேளைகளில் சிவலாச்சார்யர்கள் பாராயணம் செய்வதைக் காணமுடியும்.
இந்த ஆண்டின் முதல் நாட்களில் (ஜனவரி02-03) உலக நன்மை வேண்டி, ஐந்து கண்டங்களிலும், தொடர்ச்சியாக ஶ்ரீ ரூத்ரபாராயணத்தை ஜெபம் செய்யும் வகையில், அகண்ட ருத்ரபாராயண ஜெபமாக இலண்டன் "ஞானமயம்" அமைப்பினர் முன்னெடுத்துள்ளார்கள். நியூலாந்தில் ஆரம்பமாகிய இந்த ஜெபம் உலக நாடுகள் பலவற்றிலும் தொடர்ந்து நடைபெற்று, அமெரிக்காவில் நிறைவுபெறுகின்றது. இதனை ஞானமயம் பேஸ்புக் சமூகவலைத் தளம் ( https://www.facebook.com/gnanamayam/) உலகெங;கிலுமுள்ள ஆன்மீகப் பெருமக்கள் காண முடியும் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.