முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் , சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டித் வரையிலான ஆறுதிதிகள் " ஸ்கந்த சஷ்டி" எனச் சிறப்புப் பெறுகிறது. இக்காலங்களில் 'ஸ்கந்த புராணம் ' பாராயணம் செய்யப்பெறும் பெருமையுளது.
யாழ்ப்பாணத்துக் கந்தபுராணச் சைவ மரபு, விநாயகருக்கான 'விநாயக சஷ்டி' விரதத்தினையும் புராணபடனத்துடன் கூடிய பெருவிரதமாகப் போற்றுகிறது எனலாம்.
கார்த்திகை மாதத்து கிருஷ்ணபட்சப் பிரதமையில் தொடங்கி, மார்கழி மாதத்து சுக்ல பட்ச சஷ்டி வரையிலான 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதம் 'விநாயகர் சஷ்டி விரதம்' . ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தியை அடுத்து, விநாயகப்பெருமானை வழிபடக்கூடிய சிறப்பு மிக்க விரதங்களில் இதுவும் ஒன்று.
வாழ்வில் எல்லாப் பேறுகளும் கிடைக்கும் விநாயகர் சஷ்டி விரதம், யாழ்ப்பாணத்துச் சைவ மரபில் தனித்துவமும், முக்கியத்துவமும் பெறுவது, அந்த விரதகாலத்தில் பாராயணம் செய்யப்பெறும் "பெருங்கதை" படிப்பினால் ஆகும். விநாயக சஷ்டி விரதத்தினை, " பிள்ளையார் பெருங்கதை " என யாழ்ப்பாணத்தில் அழைப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடியும்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் வரத பண்டிதர் யாத்த " பெருங்கதை" புராண படனம், எவ்வாறான சிறப்புக்களைக் கொண்டமைந்துள்ளதென நோக்குமிடத்து , அதன் சிறப்புப் பாயிரத்தில்,
" செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே. " எனும் வரிகளில் 'பிள்ளையார் பெருங்கதை'யின் உள்ளடக்கம் தெரதிந்து கொள்ளலாம்.
இது தவிர, காப்பு, வியநாயகர் துதி, சப்பாணி, சரஸ்வதி துதி, அதிகாரம், கதை, நூற்பயன், என அமையும் பெருங்கதை பாராயணத்தில் மேலும் சில சிறப்புக்களைக் காணலாம். அதிலே குறிப்பான ஒன்று, சப்பாணி என அமையும் பகுதி.
எள்ளு பொரி தேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும்,வாழைப்பழமும், பலாப்பழமும்,
வெள்ளைப்பாலும், மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியே கொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி,
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே,
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்,
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
இந்த இரு பாடல்களில் இவையெல்லாம் படைத்துள்ளேன் ஆதலால் எம் முன்னே சப்பாணி கொண்டியிரும் பிள்ளாய் என விநாயகரை வேண்டிக் கொள்வது போல் அமைந்துள்ள இப்பாடல்கள், சுந்தர மூர்த்தி சுவாமிகள் இறைவனிட கொண்டிருந்த நட்பு மார்க்கத்திற்கும், பாரதியார் பராசக்தியிடம் " எனக்கருள உனக்கு ஏதும் தடை யுண்டோ.. " என வினவிய ஞான மார்க்கத்திற்கும் இணையானவை.
சுன்னாகம் வரத பண்டிதர் இந்நூலில் வழிபாடியற்றும் வகைதனைச் செப்பும் போதும், சேர்த்துக்கொண்ட பகுதிகளைக் கானும் போதும், அவரது ஞானத்தின் விசாலத்தில், சமூகத்தின் வளமான வாழ்வு, பல்லுயிர் குறித்த பரவலான சிந்தனை என்பன புலப்படுகிறது. இதைவிடவும், செய்யுள் நடையாயினும் சிறந்த எளிய நடையில் அமைந்த ' பெருங்கதை ' தனை ஒருவர் அமைதியுறப் படித்தால், அதன் கால அளவு ஒரு 45 நிமிடங்களாக அமையும். இது சாஸ்த்திர ரீதியாகவும், சமூக விஞ்ஞானத்தின்படியும் சிறப்பான காலக் கணிப்பீடாகும்.
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.
எனும் நூற்பயன் பாடலில் கதைப்படிப்பின் அவசியத்தையும்,
வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை – உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர் க்கும் வாராது கேடு.
எனும் பாடலில், விரதம் இருக்காவிட்டாலும் அனுசரனாக இருப்பினும் பயன்பெற முடியும் எனச் சொல்லி நிறைவு செய்கின்றார்.
சமகாலத்தில் விநாயக சஷ்டி விரதத்தினை, புலம் பெயர் தேசங்களில் வாழும் ஈழத்து சைவ மக்கள்,யாழ்.கந்தப் புராணக் கலாச்சாரம் நல்கிய, ' பிள்ளையார் பெருங்கதை' யாகத் உலகெங்கும் தொடர்கிறார்கள்.