கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே ' சுவாமியே சரணம், ஐயப்பா சரணம்' எனும் சரணகோஷங்களும், ஐயப்ப பாடல்களும் எங்கும் ஒலிக்கும். கழுத்திலே துளசி மணிமாலைகளும், கறுப்பு நிற ஆடைகளுமாக காணும் இடங்கள் தோறும் ஐயப்ப பக்தர்கள் வலம் வருவார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தக் காட்சிகளைக் காணும் நாட்களாக அமைந்திருக்கிறது இன்றைய காலம்.
இன்று பரவலாக அறியப்பட்டு, ஒழுகப்பட்டு வரும், ஐயப்ப வழிபாடு, தமிழ்வழிபாட்டு மரபுத் தொன்மம் உடையதா?. தர்மசாஸ்தா, ஐயனார், எனும் கிராமிய தமிழ் கிராமிய வழிபாட்டு முறைமையின் நீட்சியா? எனும் கேள்விகள் பலராலும் எழுப்படுகிறது. சைவசமய வழிபாட்டின் ஆழமான நோக்கில் 'ஏகன் அநேகன்' என இறையருளைப் போற்றிடும் மரபு தொன்மையானது. வேதகாலத்தில், யாகங்களின் பலன்களை வழங்குபவராக, சாஸ்தா போற்றப்படுகிறார். தந்திர சமுக்கியம் எனும் நூலிலுள்ள தியான சுலோகத்திலும், வேதத்தில் இந்திரனைப்போற்றும் பாடல்களிலும், 'ஆரியக' என அழைக்கப்படும் தெய்வம் சாஸ்தா.

சங்க இலக்கியங்களிலும், புராணங்களிலும், சாத்தன், சாஸ்தா, எனும் பெயர்களிலும் குறிப்புகள் உள்ள வகையில், இந்த வழிபாடு சங்ககாலத் தொன்மையானது என்பதையும் கருத்தில் கொள்ளலாம். இது தவிர சில ஜைன மத நூல்கள் சாத்தையன், மகா சாத்தையன் என்றும், சில பௌத்த மத நூல்களில் யோக சாத்தயன், தர்ம சாஸ்தா என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியார் பாடிய கந்தபுராணத்தில், ஐயனார் தோற்றம் பற்றிய வரலாறு பேசும் பகுதியில்
காருறழ் வெய்ய களிற்றிடையாகிப்
பாரிட எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான் எனும் ஐயனாரின் திருவுருவ வர்ணனையுடன் கூடிய பாடலில் பூரணை புஷ்கலா தேவியருடன் ஹரிஹரபுத்திரராக ஐயப்பன் யானைமீது எழுந்தருளி வருவதாகச் சொல்லப்படுகின்றது.
’மத்தமாதங்க கமநம் காருண்யாம்ருத பூஜிதம்
ஸர்வ விக்னஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்’ எனும் தர்மசாஸ்திரா ஸ்தோத்திரத்தில், ”மதம் பொருந்திய யானையை ஊர்தியாகக் கொண்டவரும், கருணை பொழியும் திருமுகத்தினரும், வணங்கத்தக்கவரும, எல்லா துன்பங்களையும் நீக்குபவரும் ஆகிய சாஸ்தாவை வணங்குகிறேன்” என்றுபாடப்பெற்றிருக்கிறது.
சாஸ்தா வழிபாடு பன்முகத்தன்மை கொண்ட ஒருவழிபாட்டுமுறையுடையது. சிறுதெய்வ வழிபாட்டில் இருந்து பெருந்தெய்வ வழிபாடு வரை பல்வேறு நிலைகளில் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் ஐயனார் எனும் பெயரில் கிராமக் காவல் தெய்வமாகவும், பெரிய கோவில்களில் தர்மசாஸ்தா அல்லது ஹரிகரபுத்திரனார் எனும் பெயரில் மஹோற்சவம் முதலான ஆகம வழிபாட்டு முறைமையுடனும் காணப்படுகிறது.
கிராமத் தெய்வமான ஐயனார் தனிக்கடவுளாகவும், ஒருகாலை மடக்கி அமர்ந்த பாவனையில் கையில் வாளேந்தி அமர்ந்திருக்கும் பாவனையிலும், குதிரைமேல், வாளேந்தி வீற்றிருக்கும் பாவனையிலும், கிராமங்களின் காவல் தெய்வமாகப் போற்றப்படுகின்றார். மடக்கிய ஒரு காலின் மேல் ஒரு கையும், மறுகையில் சாட்டையும் கொண்டு, பூரணை, புஷ்கலை, எனும் இரு தேவியருடன், தர்மசாஸ்தாவாக பெருங்கோவில்களிலும், வழிபாடியற்றப்படுகின்றார். இவரைக் ஹரிகரபுத்திரனார் என அழைப்பதும் உண்டு.

ஐயனார் வழிபாடும், ஐயப்ப வழிபாடும் ஒன்றா? அல்லது அதன் நீட்சியா? என்றால் நிட்சயமாக அது இல்லை என்கின்றார்கள் அறிஞர் பெருமக்கள். சத்தியம், நீதி, தர்மம் ஆகியவற்றைக் காப்பவரும்,தர்மத்தை நிலைநிறுத்தும் கடவுளுமான தர்மசாஸ்தாவின் மற்றுமொரு அவதாரவடிவமாக உதித்தவர் சபரிமலை ஐயப்பன் எனலாம். இது எவ்வாறெனில், மகாவிஸ்ணுவின் அவாதாரத் தோற்றங்களாக, இராமரும், கிருஷ்ணரும், மானிடத் தோற்றங்கள் பெற்று இப்பூவுலகில் அவதரித்தது போல், தர்மசாஸ்தா மணிகண்டனாக மானுடத் தோற்றத்தில் அவதரித்து, கேரளத்தின் பந்தளத்து அரச பரம்பரையில் வாழ்ந்து, சபரிமலையில் யோகநிலையில் தவக்கோலம் கொண்டமர்கின்றார் ஶ்ரீ ஐயப்பன்.
'ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையும்' பாங்கினை உணர்த்தும் வகையிலான் 'தத்துவமசி' எனும் தத்துவத்தின்படி, மனிதனின் ஆத்மா இறைவனுடன் ஒன்றிணையும்போது உண்மையான அமைதி கிடைக்கும் என்பதை உணர்த்தி நிற்கின்றது ஐயப்பவழிபாடு. சபரிமலையில் கோவில் கொண்ட ஶ்ரீ ஐயப்பன் நித்திய பிரம்மசாரி. சபரிமலை ஐயப்ப வழிபாடுகளும் முறைமைகளும் கேரள வழிபாட்டுமுறையுடன் கூடிய தனித்துவமுடையவை.

கேரளத்தில் தபசியாக இருந்த பரசுராமர், அச்சூழலிலுள்ள மலைப்பகுதிகளில், குளத்துப்புழா, ஆரியங்காவு, அச்சன் கோயில், சபரிமலை, காந்தமலை என ஐந்து இடங்களில், ஐயப்பனின் ஐந்து பருவங்களுக்கான தோற்றங்களை பிரதிஷ்டை செய்தார். ஐயப்பனின் ‘பால்ய பருவம்' எனப்படும் குழந்தை,தோற்றத்திலான ஐயப்பன் திருத்தலமாகக் குளத்துப்புழாவும், இளமைப் பருவத்தை குறிக்கும் ஐயப்பன் தலமாக ஆரியங்காவும், வாழ்வியல் பருவத்தைக் சுட்டும் வகையில், அச்சன்கோவிலும் இருக்கிறது. இங்கே ஐயப்பன் பூர்ணா, புஷ்கலா சமேத ஹரிகரபுத்திரனாகக் காட்சி தருகின்றான். துறவுநிலையில் சபரிமலையில் இருக்கும் ஐயப்பன் முக்திநிலைத் தலமாக, காந்தமலை சொல்லப்படுகிறது. இங்கே கண்ணுக்குப் புலப்படாத பொற்கோவிலில் ஐயப்பன் உறைவதாகவும், மகரஜோதிநாளில், ஜோதி வடிவமாக காட்சி தந்து அருள்பாலிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கேரளத்தின பகுதிகளிலும், அதன் அயலாக இருந்த தமிழகப் பகுதிளிலும் மட்டும் ஆரம்பத்தில் அறியப்படிருந்த ஐயப்பவழிபாடு, சபரிமலை யாத்திரை வழிபாட்டு முறைகள்,எனும் வகையில் மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைக்கும் வழிபாட்டு முறையாகக் காலக்கிராமத்தில் மாற்றம் பெற்று அறியப்பெற்றது. தமிழகத்தின் பல்துறைப் பிரபலங்களும் இந்த யாத்திரையில் ஆர்வம் கொண்டதும், இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும், இந்த மாற்றத்தின் விரிவினைத் துரிதப்படுத்தியது. சபரிமலை யாத்திரை, முக்கியமான புனித யாத்திரையாக மாற்றம் பெற்றது. ஆண்டுதோறும் சுமார் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப் பயணமாக வருவதனால், உலகில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களில், சபரிமலை இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் ஐயனார் வழிபாடு மிக நீண்டகாலமாகவே இருந்து வரும் வழிபாட்டு மரபுகளில் ஐயனார் வழிபாடும் உண்டு. உலகின் அதி உயரமான சித்திரத்தேர் உடைய அனலைதீவு ஐயனார் கோவில் முதலாக, புங்குடுதீவு, வேலனை, சுருவில், காரைநகர், ஆகிய தீவகப் பகுதிகளிலும், சுழிபுரம், சண்டிலிப்பாய், சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன், வரையிலான பல்வேறு பகுதிகளிலும், மிக நீண்டகாலமாகவே ஐயானார் வழிபாடு இருந்து வருகிறது. பூரணை, புஷகலை, தேவியர் சகிதமாக தர்மசாஸ்தா வீற்றிருக்கும், மிகப்பழமை வாய்ந்த இந்த ஆலயங்கள் யாவும், இன்றளவும் ஐயனார் கோவில்களாகவே அழைக்கப்பட்டு, மஹோற்சவம் முதலான பெருவிழாக்களும், மடைபரப்பல் முதலான கிராமிய வழிபாடுகளும் இயற்றப்படுகின்றன. சபரிமலை ஐயப்பன் வழிபாடும், யாத்திரையும், பரவலாக, அறியப்படுகையில், இலங்கையில் முதலில், தலைநகர் கொழும்பு, மற்றும் மலையகப்பகுதிகளிலும் தொடங்கிய இவ்வழிபாடு. அதன் வழியே யாழ்ப்பாணச் சூழலிலும் கவனம் பெறத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டு காலத்தில், பல்வேறு புதிய ஐயப்பன் ஆலயங்கள் உருவாகியும், சில ஆலயங்களில் பரிவார மூர்த்தியாக, ஶ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டும், ஐயப்ப வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இலங்கை அரசு சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரித்தும் உள்ளது.
இப்போது இலங்கையின் பல பாகங்களிலும், சபரிமலையாத்திரை, மண்டலவிரதம், ஐயப்பன் பஜனை என்பன பிரசித்தம் பெற்றுள்ளது. கடுமையான விரதநடைமுறைகள் இருந்த போதும், ஐயப்ப மண்டலவிரதத்திலும், சபரிமலையாத்திரையிலும், பலரும் ஆரவம் கொள்வதற்கு, அந்த யாத்திரையில் காணப்பெறும் பல்வேறு கூறுகளைச் சொல்லலாம். குறிப்பாக, உள்நாட்டுப்போரினால் முடங்கிக் கிடந்த ஒரு சமூகம், தனது பயணங்களின் எல்லைகளை இந்த யாத்திரை மூலம் விரித்துக் கொள்வதும், யாத்திரைப் பாதையில் காணக்கூடிய மலைப்பிரதேச இயற்கை வனப்பும், குளிர்மையும் தரும் புது அனுபவமும்,தாளக்கட்டுடன் பாடப்படும் பஜனைப்பாடல்களின் இசையில், மனம் லயித்து மகிழ்வதும், அனைத்து சமூகத்தினரும் இணைந்து வழிபடுவதனால் வளரும், சமூக நல்லிணக்கமும், இளையவர்கள் மத்தியில் மிகுந்த ஈடுபாட்டினையும், இவ்விரதகாலம் உள்ளுணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களும் இந்த வழிபாட்டின் மீதான, ஆர்வத்தைப் பற்றுதலை ஏற்படுத்தக் காரணமாயிருக்கலாம். இவ்வாறான உயர்வுகள் காணப்படுகின்ற போதிலும், இந்த விரதத்தினை, வழிபாட்டினை, கடைப்பிடிக்கும் சிலரும், வழிநடத்தும் சிலரும், நடந்து கொள்ளும் தன்மைகளில் காணப்படும் அதிருப்திகள், நல்ல ஆத்ம அனுபவம் தரும் இவ்வழிபாட்டின் மீதான பல்வேறு வினாக்களினை எழுப்புகின்றது. எனினும் சபரிமலையாத்திரை காலத்தில், இலங்கை சார்ந்த ஐயப்ப பக்தர்கள் பலரும், அவ் விரதத்தின் புனிதத்தினை உணர்ந்து காப்பவர்களாக உள்ளதை நேரில் காணவும் முடியும். கேரளத்தின் வழிபாட்டு முறைமையொன்றினை, நமது பராம்பரிய தமிழ் வழிபாட்டு முறைகள் சிதைவுறா வண்ணம் கவனத்துடன் கைக்கொள்ள வேண்டியது என்பது முக்கியமானது.

சிவபரத்தை மறந்து சைவசமயிகள் ஐயப்ப வழிபாட்டில் ஈடுபடலாமா? இந்த வழிபாட்டு முறை நமக்கு ஏற்புடையதா? இல்லையா ? எனும் கேள்விகளும் உண்டு. வேண்டுதல் வேண்டாமையில்லாத சிவப்பரம்பொருள் அறியாததொன்றில்லை.காலமுமாகி நிற்கின்ற பரம்பொருள் இக்காலத்துக்கு இதுவென வகுத்துள்ளான் போலும் எனக்கொள்வதே பொருந்தும். முத்திரை மாலை அணியும்,விரதாதிகள், உளவியல் ரீதியாக தங்களை தனித்துவமாக தயார்ப்படுத்திக் கொள்கையில், மனதில் புத்துணர்வும் விரதசங்கல்பமும் பெறுகின்றார்கள் என எண்ணுவது சாலப்பொருந்தும். அவர்களைப் பதினெட்டுப்படிகளும், பதினெட்டு வருட யாத்திரையும், படிபடியாக மேலும் உயர்த்திப் பக்குவப்படுத்திப் பயனுறச் செய்கின்றது என்பது அவரவர்க்கான சுய அனுபவம். அந்த அனுபவத்தின் பெறுபேற்றில் ஏதோ ஒரு உண்மை சத்தியமென ஒளிந்திருக்கிறது. அதுவே சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளை நோக்கி, வருடாவருடம் எண்ணற்ற புதியவர்களை அழைத்து வருகிறது எனலாம். அவ்வாறு வருபவர்கள் யாவரும் பரத்துள் மறைந்து, பரமாகும் ஜீவன்களே ! அந்த நம்பிக்கையிலேயே முத்திரை மாலை அணிந்தவர்களை 'சுவாமி ' என அழைக்கின்றார்கள். அந்த அன்பின் நம்பிக்கையில், மாலையணிந்த அவர்களிடத்தில் மட்டுமன்றி, அனைவரிடத்திலும் அன்பே சிவமாக அமர்ந்தருள் பொலியும் என நம்பிக்கையுறுவதே நலம்.
‘மரத்தில் மறைந்தது மாமதயானை
மரத்தை மறைத்தது மாமதயானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!’ - திருமூலர் திருமந்திரம்.
