சைவப் பெருஞ்சமயத்தில் தெய்வச் சேக்கிழாரின் 'பெரிய புராணம்' சிவபரம்பொருளின் வலது திருக்கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் 'திருவிளையாடல் புராணம்' இடது திருக்கண்ணாகவும் போற்றப் பெறுகின்றது.
கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் குருபூஜைத் திருநாள் இன்று (மாசி மிருகசீரிஷம் ). Devarajan Natarajan அவர்கள் எழுதிய சிறப்புப் பதிவு இது. அவர்களுக்கான நன்றிகளுடன் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.
8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 10ஆம் நூற்றாண்டின் துவக்கத்திற்குள்ளான காலகட்டத்தில் தோன்றிய அருளாளர் கச்சியப்ப சிவாச்சாரியார். அவதாரத் தலம் காஞ்சிபுரம். தமிழ்; வடமொழி இரண்டிலுமே அதீத புலமை கொண்டிருந்த தகைமையாளர்.
காஞ்சி - குமாரக் கோட்டத்துக் கந்தப்
பெருமான் சுவாமிகளின் கனவில் எழுந்தருளி வந்து 'வேத வியாசர் வடமொழியில் இயற்றிய ஸ்காந்த புராணத்தில், சங்கர சம்ஹிதையில் இடம்பெறும் சிவரகசிய கண்டத்தின் முதல் ஆறு பகுதிகளைக் கந்தபுராணமாகத் தமிழில் இயற்றுவாயாக' என்று பெருவிருப்புடன் பணித்தருளி, திகட சக்கர' என்று அடியெடுத்தும் கொடுத்துப் பேரருள் புரிந்துள்ளான்.
சுவாமிகள் அனுதினமும் தான் இயற்றி வரும் கந்தபுராணத் திருப்பாடல்களை, (அர்த்த ஜாம பூஜை வேளையில்) குமாரக் கோட்ட வேலவனின் திருவடிகளில் வைத்து விட்டு மறுநாள் காலை அவற்றினை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இவ்வாறு செல்லும் சில சமயங்களில், திருப்பாடல்களில் சில திருத்தங்கள் புரியப் பெற்றிருப்பதைக் கண்டு, கந்தவேளின் திருவருளை வியந்து போற்றி வணங்குவார்.
நூல் அரங்கேற்ற நிகழ்வில், 'திகழ் தச கரம்' என்பது 'திகட சக்கரம்' என்று புணர்வதற்கான இலக்கண விதியில்லை எனும் மறுப்பொன்று உருவாக, புராண நாயகனான சிவகுருநாதனே புலவரொருவரின் உருவில் அங்கு எழுந்தருளி வந்து, தக்க இலக்கணச் சான்றுகளை அவையோரிடம் காண்பித்து அத்தடையினை நீக்கியருள் புரிந்துள்ளான்.
உற்பத்தி காண்டம்; அசுர காண்டம்; மகேந்திர காண்டம்; யுத்த காண்டம்; தேவ காண்டம்; தக்ஷ காண்டம் எனும் ஆறு காண்டங்களோடு, 10,345 திருப்பாடல்களால் கோர்க்கப் பெற்றுள்ளது கந்தபுராண மாகாவியம்.
-
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி!
நன்றி: Devarajan Natarajan