free website hit counter

சித்திரைப்பூரணையும் - சித்திரகுப்த விரதமும் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன், மாதுர் காரகன். நம் மனத்தின் எண்ணங்களுக்கான காரகத்துவமும்  சந்திரனுக்கானதே.

தட்சனாயன காலத்தில் வரும் அமாவாசை தந்தையரைப்போற்றுதலும், பிதிர் தர்ப்பணங்களுக்குச் சிறப்பானதும் போன்று, உத்தராயண காலத்தில் வரும் சித்திரைப் பூரணை தாயினை  நினைந்து வழிபடச் சிறப்பு என முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் பூரணை என்னும் முழுமதி வரும்போது  சித்திரைப்பூரணைக்கு என்ன சிறப்பு?

மனோகாரகனாகிய சந்திரன் நிறைமதியாக ஒளி தரும் சித்திரைப்பூரணை ஞானம் தரும் நன்நாள். அன்றைய நாளில் நம் அன்னையை அகில லோக மாதாவாகிய பராசக்தியின் அருள் வடிவமாகப் போற்றி வணங்குதற்கு  உரிய நாள். சித்திர குப்தரின் அவதாரம் சித்திரா பௌர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகமுண்டு. அன்னை பராசக்தி ஒரு ஓவியத்தை வரைந்து, அந்த ஓவியத்திற்கு உயிர் தந்த போது, சித்திர குப்தர் அவதாரம் நிகழ்ந்தது. 

சித்திர என்பது ஓவியம் என்றும், குப்தம் என்பது ரகசியம் என்றும் பொருள்பெறும். மனிதர்களின்  பாவபுண்ணியக் கணக்குகளை கணக்கிட்டு,  நாம் எவ்வளவு நன்மை செய்தோம், தீமை செய்தோம் என்பதற்கு ஏற்ற வகையிலே நமக்கு அடுத்த பிறப்பு அமையும். இந்த சித்திர குப்தர் நமக்குள்ளேயுள்ள மனம்தான். நம் எல்லா செயல்களையும் நம்மைவிட நன்கு தெரிந்தவர் யாராக இருக்க முடியும். ஆகவே நாம் பெற்றுணரும் ஞானத்தின் வழியே, நம் கணக்கிலுள்ள பாவ புண்ணியங்களை திருத்திக்கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரு நன்னாள்  சித்திரைப்பூரணை.

ஞானத்தினை நல்கும் இந்த நிறைமதி  நாளில், அகிலத்திற்கே அன்னையாகிய ஆதிபராசக்தியை, பரமேஸ்வரப் பெருமானுடன் துதித்து, நல்லதை மட்டுமே செய்ய முயற்சி செய்வேன் என உறுதி கொண்டு, அன்னதானம் முதலான தானங்களை வழங்கி,  சித்திர குப்தரின் அருளைப் பெறவேண்டும். 

சித்திரைப் பூரணையில்தான், சித்தார்த்தன் புத்தனாக ஞானம் பெற்றார். இந்த நாளினை உலகெங்கும் வாழும்  பெளத்தர்கள்  வெசாக் என்ற பெயரில்  கொண்டாடுவார்கள்.நம் முருகப்பெருமானின் ஜனன நட்சத்திரமாகச் சொல்லப்படுகின்ற விசாக நட்சத்திரத்திலே புத்தர் அவதரித்தார். 

இந்த வருடம் சித்ரா பெளர்ணமி வரக்கூடிய 12.05.25 திங்கட்கிழமை நன்நாளில்,  முருகனுடைய விசாக நட்சத்திரத்தில் கூடிவருவது சிறப்பு. சாகம் என்றால் பல்வேறு பிரிவுகள் என்று பொருள்.வி+சாகம் என்றால் பிரிவுகள் இல்லை என்றாகும். இதனை மேலும் இலகுவாக் கூறின், பிரிவுகள், வகைகள் அற்ற ஒன்று எனக் கூறலாம். ஞானத்திற்குரிய இந்த நல்ல நாளில், தூய மனத்துடன் இறையடி தொழுதிட, நம் சொல் செயல் எல்லாம் ஒன்றிணைந்து வெற்றியைத் தரும்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula