இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.
இந்த ஆண்டு 150 வருட உற்சவம் என்பதும், 10 வருடங்களின் பின், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கவிக்கிரக தரிசனமும், வெள்ளி இரதத்தில் கந்தவேல் பெருமான் எழுந்தருளி நகர்வலம் வருவதும், இவ்வருட விழாவினை மேலும் சிறப்பித்திருக்கிறது.
தமிழகத்திலிருந்து வணிகத்திற்காக திசையெங்கும் சென்ற நாட்டுக்கோட்டை நகரத்தார், தாங்கள் வாழுமிடங்களில், தங்கள் வழிபாட்டிற்காக நிறுவிய ஆலயங்கள் பலவும், இன்றுவரை அவர்களது பரம்பரையினரால் சிறப்புறப் பேணிப் பாதுகாக்கப்பெற்று வழிபாடுகள் இயற்றப்பட்டும் வருகின்றன.
இலங்கைத் தலைநகர் கொழும்பில், செட்டியார் தெரு, நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் வணிகமையமாக திகழ்ந்த பகுதி. ஆடிமாதத்தில் கதிர்காம உற்சவம் நடைபெறும், ஆடிமாதப் பௌர்ணிமி காலத்தில், இங்குள் கதிரேசன் கோவிலில் இருந்து, பம்பலப்பிட்டியுள்ள புதிய கதிரேசன் கோவிலுக்கு, முருகப்பெருமான் இரதபவனியாக எழுந்தருளுதலும், பம்பலப்பிட்டி கதிரேதசன் கோவிலில் மூன்று தினங்கள் நடைபெறும் ஆடிவேல் தரிசனமும், ஆடிவேல் விழாவும் சிறப்புடையன.
நாட்டிலிருந்த குழப்ப நிலைகள், தொடர்ந்த கொரோனா பெருந்தொற்று என்பவற்றால், சில வருடங்களாகத் தடைபட்டிருந்த ஆடிவேல் உற்சவ இரத பவனி, 150 வருட நிறைவினை ஒட்டி கடந்த மூன்று தினங்களாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை காலை செட்டியார்தெரு கதிரேசன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஆடிவேல் இரதம், அன்றிரவு பம்பலப்பிட்டி கதிரேசன் கோவிலை அடைந்தது. ஞாயிறு, திங்கள், அங்கு முருகப்பெருமானுக்கு விஷேட அலங்கார பூஜைகளும், தரிசனங்களும் இடம்பெற்றன. இன்று அங்கிருந்து மீளவும் செட்டியார் தெரு கதிரேசன் கோவிலுக்கு ஆடிவேல் ரதம் புறப்பட்டது.
ஆடிவேல் உற்சவகாலங்களில், அரசியற் பிரமுகர்கள் உட்பட, அடியார்கள் பல முருகப்பெருமானின் திவ்விய தரிசனம் பெற்று மகிழ்ந்தார்கள். தினமும், மாஹேஸ்வரபூஜையும், பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இரதபவனியில் பல்வேறு அலங்கார நடனங்களும், வாத்தியக் கலைஞர்களும், ஊர்த்திகளும் அணிவகுத்தன.