free website hit counter

ஒரு தேடலின் தொடக்கம் !

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேடல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. அது பொருள் தேடல், புறத் தேடல் , என்பவற்றுக்கும் அப்பால் அகத் தேடலாக மாறும்போது, கிடைப்பது அளப்பரிய ஞானம்.

நம் பள்ளிக் கல்வியில் கிடைப்பது அறிவு. அந்த அறிவின் துணைகொண்டு,விசாலமான பார்வையுடன், ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கையில் கிடைப்பது பேரறிவான ஞானம். அறிவு அலையெறியும் கடல். ஆழ் சமுத்திரம் ஞானம் என உதாரணம் கொள்ளலாமோ என்பது கூட ஒரு கேள்விதான். 

ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் வேண்டியதை எல்லாம் கொடுக்கின்றார்கள். தேவைப்படும் அன்பு தாராளமாகக் கிடைக்கிறது. ஆனாலும் அக் குழந்தையிடத்தில் ஏதோ ஒரு மனக்குறை இதயத்தில் துளையாக தோன்றி, வளர வளர பெரிதாகி, பேரிருளில் ஆழ்த்துகின்றது. அந்தப் பேரிருளில் இருந்து மீண்டு வர அந்தக் குழந்தை என்ன செய்தாள் என்பதுதான் பாதுமி பாஸ்கரன் இத்தாலிய மொழியில் எழுதியிருக்கும் "Le parole mai dette " - சொல்லப்படாத வார்த்தைகள் - எனும் கதை. இக் கதையினை ஒரு புனைவாக மட்டுமன்றி, உளவியல் அனுபவமாகவும் காணமுடியும் என்பது இப்புதகத்தின் சிறப்பாகும்.

இத்தாலியின் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்றான Erickson வெளியீட்டில், Francesco Smeragliuolo அவர்களின் அழகான வரைகலை வடிவமைப்புடன், பாதுமி பாஸ்கரனின் எண்ணத்திலும் எழுத்திலும் பிரசவித்திருக்கிறது புத்தகம். இக்கதையின் கரு உள்ளடக்கம் எத்தனை ஆழமானதோ அத்தனை அழகானது இப்புத்தகத்தில் காணப்படும் சித்திரங்கள். அதிலும் அக் குழந்தையை. அக்குழந்தையின் பெற்றோர்களை, தமிழ் சமூகம் சார்ந்தவர்களாக வடிவமைத்திருப்பது மேலும் சிறப்பு.

உண்மையில் இந்தப் புத்தகம் சிறுவர்களுக்கானது எனும் வகையில் வெளிவந்திருந்தாலும், பெரியவர்களுக்கான வாசிப்புக்கும், சிந்தனைக்கும் உரியதுதான் என்பது எமது எண்ணம். ஐரோப்பிய இலக்கியப் பெருவெளியில், இத்தாலிய எழுத்துக்களுக்கான தனித்துவம் முக்கியமானதும் விசாலமானதும். அந்தப் பெருவெளியில் ஒரு எழுத்தாளராக தமிழ் சமூகம் சார்ந்து கால் பதித்திருக்கும் பாதுமி பாஸ்கரனின் முயற்சி கவனிப்புக்கும் பாராட்டுக்குமுரியது.

ஈழத்திலிருந்து சுவிற்சர்லாந்துக்குப் புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தவர் பாதுமி பாஸ்கரன். சுவிற்சர்லாந்தில் கல்விச் சூழலில், கல்வி பயின்று, கல்வித்துறையில் முன்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, தற்போது கதிரியக்கவியல் துறைசார் கல்விப் பயிற்சினை மேற்கொண்டு வரும் இவர் தாய்மொழியான தமிழ மொழியிலும் நல்லறிவு மிக்கவர். தமிழ்மொழி மற்றும் கலாச்சாரச்செயற்பாடுகளில் ஆர்வமுடைய இவரின் மொழியார்வமும் புலனறிவும், தேசஎல்லைகள் தாண்டி எழுத்தாக மலர்வது  ஈழமண்ணின் இன்னுமொரு  பரிமாணம் என மகிழ்ச்சி கொள்ளலாம்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula